2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
2025 ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கியதும் முதல் போட்டியே மழையால் கைவிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
முன்கூட்டியே போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று வானிலை முன்னறிவிப்பு கூறியது. 70 சதவீதத்துக்கு மேல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், டாஸ் போடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு வரை மழை பெய்யவில்லை. ஆனால் பின்னர் மழை வெளுத்து வாங்கியது.
மே 8 அன்று திடீரென இடைநிறுத்தப்பட்ட தொடர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இன்றைய ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு ஆர்சிபி விளையாடும் முதல் ஆட்டமும் இதுவாகும். இதனால் ஏராளமான ரசிகர்கள் கோலிக்காக இந்தப் போட்டியைப் பார்க்க வருவார்கள் என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த போட்டிக்கு முன்பு இன்னும் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஆறாவது இடத்தில் உள்ளதால், KKR அணிக்கு இது கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டமாக இருந்தது. ஆட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் கொல்கத்தா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பெங்களூரு அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் 17 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஆர்.சி.பி. அணி மே 23ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாட உள்ளது, பின்னர் தங்கள் இறுதி லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது. ஆர்சிபி அணி அடுத்த ஆட்டத்தில் விளையாடுவதற்கு முன்பே பிளேஆஃப் சுற்றில் இடம் உறுதியாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் பிற்பகல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும். மாலையில் டெல்லி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
