மல்லை சத்யாவை பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் வைகோ ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக மல்லை சத்யா, வைகோ தனது மகனுக்காக தனக்கு துரோகி பட்டம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Internal conflict in MDMK : திமுகவில் தனது மகன் ஸ்டாலினை அரசியல் வாரிசாக கருணாநிதி கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை உடைத்து வெளியேறினார் வைகோ, இதனையடுத்து தொடங்கிய கட்சி தான் மதிமுக, திமுகவிற்கு இணையான செல்வாக்கு பெற்றிருந்த வைகோ, தேர்தல் களத்தில் எடுத்த தவறான முடிவால் தேர்தல்களில் தோல்வியும், தேர்தல் புறக்கணிப்பும் என்ற அறிவிப்பும் நிர்வாகிகளை அதிர்ச்சி அடையசெய்தது. இதனால் நிர்வாகிகள் கூண்டோடு காலி செய்து மாற்று கட்சிக்கு இடம்பெயர்ந்தனர். இந்த சூழலில் தான் வைகோ தனது வயது மூப்பு காரணமாக தனது மகன் துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்தார்.
வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சியை தொடங்கிய வைகோ
வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சி தொடங்கிய வைகோ, தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தது பலரையும் விமர்சிக்க வைத்தது. இதற்கு நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சில மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் தான் மதிமுகவில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யா இடையே கட்சி அதிகாரம் மற்றும் செல்வாக்கு தொடர்பாக மோதல் நீடித்து வந்தது. இதனால் துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்தார், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இதனையடுத்து இரு தரப்பையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார். இருந்த போதும் மறைமுகமாக மோதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் மதிமுக கூட்டங்களில் மல்லை சத்யாவின் படங்கள் தொடர்ந்து தவிர்க்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் 29 தேதியன்று நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யாவை கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் மல்லை சத்யாவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த மல்லை சத்யா, தனது 32 ஆண்டு கட்சி உழைப்புக்கு "நம்பிக்கை துரோகி" உள்ளிட்ட விருதுகள் கிடைத்ததாகவும், வைகோவுக்கு தனது விசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
மல்லை சத்யாவிற்கு துரோகி பட்டம்
மேலும் அவர் கூறுகையில், துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து என்னை வெளியேற்ற வைகோ பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் தருவதாகவும் கூறியுள்ளார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார். எனவே வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை என மல்லை சத்யா வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இதனிடையே வைகோ சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், இரண்டு ஆண்டுகளாகவே மல்லை சத்யா இயக்கத்திற்கு எதிராக கட்சியை விட்டு சென்றவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு நிகழ்சிகளுக்கு சென்று வந்தார். என்னை கடுமையாக விமர்சித்து பதிவு செய்து வரும் நபர்களோடு நெருக்கமாக இருந்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து தவறாக பதிவு செய்கிறார்கள் அதனை இங்குள்ளவர்கள் பதிவு செய்கிறார்கள். அந்த நபர்களின் வீட்டில் நடைபெறும் திருமண நிகழ்வில் மல்லை சத்யா கலந்து கொண்டுள்ளார். மல்லை சத்யா எந்த நிகழ்விற்கும் செல்லும் போதும் மதிமுக துணை பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை. மாமல்லபுரதமிழ் சங்க இயக்க தலைவர் என்றே குறிப்பிடுகிறார்.
மல்லை சத்யாவை விமர்சித்தது ஏன்.? வைகோ விளக்கம்
வெளிநாடு பயணம் செல்லும் போது கூட என்னிடம் எந்த தகவலும் கூறி செல்லவில்லை. துரோகம் இழைத்தவர்களு நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தொலைபேசியில் பேசுகிறார். மதிமுகவிற்குள் இயக்கத்இற்கு தனி குழுவை உருவாக்க மல்லை சத்யா முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனை ஆதாரங்களோடு நிர்வாகிகள் நிரூபித்தார்கள். இதனையடுத்து தான் நிர்வாக குழு கூட்டத்தில் உண்மையை சொல்லவில்லையென்றால் நிர்வாகிகளுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்காக சொன்னேன் என வைகோ தெரிவித்துள்ளார்
