பாமக யாருக்கு.? தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் ராமதாஸ், அன்புமணி.! யார் கை ஓங்குகிறது.?
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி தலைமைப் பொறுப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்து, தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது.

பாமகவில் தீவரம் அடையும் தந்தை- மகன் மோதல்
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்த படியாக செல்வாக்கு உள்ள கட்சியாக பாமக உள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமகவின் ஓட்டுக்கள் அதிகமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு தேர்தல்களிலும் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பாமக பெற்று வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக என மாறி மாறி கூட்டணியை அமைக்கும் பாமக கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையில் கூட்டணியில் இணைந்தது.
2019ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை கழட்டிவிட்டு விட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதிலும் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்
இந்த நிலையில் தான் பாமகவின் நிறுவனராக ராமதாசுக்கும் அக்கட்சி தலைவராக அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தது. அந்த வகையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்க ராமதாஸ் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
அடுத்தாக ராமதாஸ், அன்புமணியை கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கி, புதிய 21 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்தார். இதனையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டிய ராமதாஸ் , அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும், கூட்டணி அதிகாரம் தொடர்பாவும் தீர்மானத்தை கொண்டு வந்ததார். மேலும் வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் ராமதாஸ் கையெழுத்திடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் ராமதாஸ்- அன்பமணி
தற்போது இரு தரப்பிற்கும் இடையிலான உட்கட்சி மோதல் இந்திய தேர்தல் ஆணையத்தை அடைந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவி மற்றும் 'மாம்பழம்' சின்னம் யாருக்கு உரிமை என்பது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர். அந்த வகையில் அன்புமணியின் தலைவர் பதவிக் காலம் மே 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதாகவும் மே 29 முதல் அப்பொறுப்பை ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அன்புமணி, கட்சியின் பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தானே எனவும், இதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கட்சியின் விதிகளின்படி, தலைவர் பதவியை பொதுக்குழு மட்டுமே முடிவு செய்ய முடியும் எனவும் ராமதாசுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் ராமதாஸின் முடிவுகள் சட்டவிரோதமானவை எனவும் விமர்சித்தார்.
பாமகவில் மோதல்- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான கடிதத்துடன் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு தீர்மானங்களின் நகல்களும்தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க அன்புமணி, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக பாமகவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவுகிறது. இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவான நிர்வாகிகளை நியமித்தும், எதிர் தரப்பு நிர்வாகிகளை நீக்கியும் செயல்பட்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த உட்கட்சி பிளவு பாமகவின் அரசியல் செல்வாக்கை பாதிக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.