முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம், முதியவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் உள்ள இன்ஆர்பிட் மாலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியாவுடன் இருந்துள்ளார். அப்போது
அவர்களிடம் வந்த வயதான ஒருவர் ஆண்ட்ரியாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அந்த முதியவர், ஆண்ட்ரியாவிடம் தவறாக கை வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்துபோன ஆண்ட்ரியா, அவரது கையை தடுத்துவிட்டு முதியவரை பளார் என்று அறைந்துள்ளார். மேலும் அவரது செய்கை குறித்து மோசமாக திட்டியுள்ளார்.

சிறிது நேரத்ம் கழித்து அந்த முதியவரின் மகன் அன்கூர் திவாரி, அந்த மாலிற்கு வந்து, ஆண்ட்ரியாவிடமும், வினோத் காம்ப்ளியிடமும் சண்டை போட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அன்கூர் திவாரிக்கும், வினோத்திற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அன்கூர் திவாரி, தனது தந்தை தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் திவாரியின் சகோதரர்தான் இந்த அன்கூர் திவாரி. இவரது தந்தைதான், வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

அன்கூர் திவாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு தரப்பு நியாயங்களையும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.