உச்ச நீதிமன்ற நீதிபதியாக, உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஎம் ஜோசப்பை நியமிக்கும்படி, மீண்டும் மத்திய அரசை உச்சநீதிமன்ற கொலீஜியம் வலியுறுத்தி உள்ளது. கடந்த ஜனவரி மாதம், இந்து மல்ஹோத்ரா மற்றும் கேஎம் ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி, உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. 

நீண்ட காத்திருப்புக்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்து மல்ஹோத்ரா குறித்த பரிந்துரையை மட்டும் ஏற்றுக்கொண்டு கே.எம்.ஜோசப் தொடர்பான பரிந்துரையை மட்டும் மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பி இருந்தார்.இதுபற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஓர் கடிதம் எழுதியிருந்தார். அதில் கேஎம் ஜோசப் ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்பட கூடாது என்பதற்கான மூன்று காரணங்களை தெரிவித்திருந்தார்.

முதலாவதாக, கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த ஒரு நீதிபதி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ளார். எனவே கே.எம்.ஜோசப்பின் நியமனம் சீரான பிரதிநிதித்துவத்துக்கு எதிராக இருக்கும். நீதிபதி ஜோசப் நாட்டின் நீதிபதிகள் மூப்புப் பட்டியலில் 42-வது இடத்தில் உள்ளார். இது பதவி மூப்புப் பட்டியலில் மிகவும் கீழே உள்ள இடம். மூன்றாவதாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரில் இருந்து உச்சநீதிமன்றத்தில் இதுவரை நீதிபதிகள் இல்லை என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டிருந்தார். 

ரவிசங்கர் பிரசாத்தின் கடிதம் பெற்ற நிலையில், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 20) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவாக, மீண்டும் கேஎம் ஜோசப் பெயரையே உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதன்பேரில், உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக உள்ள கேஎம் ஜோசப்பை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும்படி, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதுபற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், கேஎம் ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் முழு தகுதி கொண்டவராக உள்ளார். இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை கவனத்துடன் பரிசீலித்தோம். அதன்பிறகே, எங்களின் முந்தைய கோரிக்கையை மீண்டும் மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம், என்று குறிப்பிட்டார். இதன்மூலமாக, மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.