Asianet News TamilAsianet News Tamil

விண்ணில் பாய தயாராக பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்.. 103 செயற்கை கோள்களுடன் செலுத்தி சாதனை புரிய இஸ்ரோ திட்டம்…

pslv 37-new-rocket
Author
First Published Jan 2, 2017, 7:56 AM IST


விண்ணில் பாய தயாராக பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்.. 103 செயற்கை கோள்களுடன் செலுத்தி சாதனை புரிய இஸ்ரோ திட்டம்…

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி விண்ணில் செலுத்துகிறது. இதன் மூலம் உலக சாதனை படைக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான  பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

இந்த ராக்கெட்டுகன் மூலம்  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

இதில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை இஸ்ரோவின் வணிகக் கிளையான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனம் மூலம் பெற்று, அதற்குரிய கட்டணத்தை அந்தந்த நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை இதுவரை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கைகோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கைகோள்களும் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 103 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி விண்ணில் நிலை நிறுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்காக நானோ வகை செயற்கைகோள்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு ராக்கெட்டுகளில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


அதன்படி பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட், வருகிற 27–ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட்டில், வானிலையை துல்லியமாக கணித்து கூறும் கார்ட்டோ சாட்–2டி உள்ளிட்ட 103 செயற்கைகோள்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios