கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோவை தற்காலிகமாக நீக்கி வாடிகன் போப்  உத்தரவிட்டுள்ளார். 2014 - 2016 ஆம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பிஷப் பிராங்கோ முலக்கல். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை 13 முறை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அப்போது தேவாலய நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீஸிலிலும், வாடிகன் திருச்சபைக்கும் புகார் அளித்தார்.  குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் பிராங்கோ முலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து வருகிறார். ஆனால், கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று பிராங்கோ மறுத்து வந்தார். 

கடந்த இருவாரங்களுக்கு முன் போலீஸார் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். பிராங்கோவின் தந்தை அந்தோணி, ஜலந்தர் தேவாலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பாதிரியார் பீட்டர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தோலிக்க 
திருச்சபையும் ஒருநபர் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. 

 ஆனாலும், பிஷப் பிராங்கோ கைது செய்யப்படவில்லை.இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக சக கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பிராங்கோவுக்கு, போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை அடுத்து, பிராங்கோ அனைத்து பொறுப்புகளையும் தனது ஜூனியரிடம் ஒப்படைத்துவிட்டு பிஷப் பதவியில் இருந்து விலகினார்.இந்த நிலையில், ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோவை தற்காலிகமாக நீக்கி வாடிகன் போப் உத்தரவிட்டுள்ளார்.