நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் 2 பேர், திகார் சிறை நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த புதிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். மருத்துவ மாணவியைப் பலாத்காரம் செய்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 

இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்வயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.  இதில் சிலருக்கு கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக குற்றவாளிகள் வினய் குமார் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா தரப்பில் வழக்குரைஞர் ஏ.பி.சிங், டெல்லி நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘வினய் குமார் சா்மா கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, அக்சய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோர் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இன்னமும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால், சிறை அதிகாரிகள் சில ஆவணங்களைத் தர மறுப்பதால் மனுக்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. 
முக்கியமாக, 70 பக்கங்கள் கொண்ட வினய் குமாரின் டைரியை சிறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். அதனை உடனடியாக தர சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது குற்றவாளிகள் தண்டனையை தாமதம் செய்ய தந்திரம் செய்வதாகவும், குற்றவாளிகளுக்கு தேவையான ஆவணங்களை சிறை நிர்வாகம் ஏற்கனவே வழங்கிவிட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்ற நீதிமன்றம், குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.