பிரகாசமான வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடுகிறது.கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை  ஒழிப்பபதாக கூறி  கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.ஆனால் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 50, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. அதன் பிறகும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறையவில்லை.இதனால் புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இன்று வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள  200 ரூபாய் நோட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்துடன் வெளியாக இருக்கும் இந்த நோட்டின் முன்பக்கத்தில் நடுவே மகாத்மா காந்தி படம் இடம் பெற்று உள்ளது. இடது புறத்தில் 200 என்ற எண் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது.

வலது புறத்தில் அசோக சின்னமும், ‘எச்’ என்ற எழுத்தும், 200 என்ற எண் பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

நோட்டின் வலது மற்றும் இடது புறத்தில் 4 கோடுகளும் அதன் நடுவில் 2 சிறிய வட்டங்களும் உள்ளன. பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் மகாத்மா காந்தி படம், ‘எச்’ எழுத்து, அசோக சின்னம் ஆகியவை சற்று மேல் எழும்பியவாறு இடம் பெற்று இருக்கின்றன.

நோட்டின் பின்பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபி படம் உள்ளது. மேலும் தூய்மை இந்தியா இலச்சினை மற்றும் வாசகமும், தமிழ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 200 ரூபாய் என்ற எழுத்தும் இடம் பெற்று இருக்கிறது. இந்த நோட்டு 66 மில்லி மீட்டர் உயரமும், 146 மில்லி மீட்டர் அகலமும் கொண்டது  என ரிசர்வ் தெரிவித்துள்ளது.