சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு காவல்துறையினர் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் தண்டேவாடாவில் நேற்று மதியம் நக்சலைட்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தண்டேவாடாவின் அரன்பூர் காவல் நிலையப் பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நக்சல்கள், வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 40 கிலோ எடையுள்ள ஐஇடி வெடிபொருட்களை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 காவர்களும், வாகன ஓட்டுநர் ஒருவரும் என 11 பேர் உயிரிழந்தனர். மேலும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சாலையின் குறுக்கே கிட்டத்தட்ட 10 அடி ஆழத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் போலீசார் சென்ற வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலல்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். குண்டுவெடிப்பு நடந்த பகுதி மாநில தலைநகர் ராய்பூரில் இருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க : இலங்கை செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்..
உயிரிழந்த பாதுகாப்புப் பணியாளர்கள், மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்புப் பிரிவான மாவட்ட ரிசர்வ் காவலர் படையை ( District Reserve Guard-DRG) சேர்ந்தவர்கள். உயிரிழந்த 10 பணியாளர்களில் 8 பேர் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலும் உள்ளூர் பழங்குடி மக்கள் இந்த டிஆர்ஜி படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே நக்சல் நடத்திய கொடூர தாக்குதவீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தண்டேவாடாவில் இன்று நடைபெறுகிறது. பின்னர், இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில் நக்சல் அச்சுறுத்தல் 7 மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். நக்சலைட்கள் புதைத்துள்ள மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை (IEDs) கண்டறியும் வகையில், வாகனத்தில் செல்லும்போதும், கண்ணிவெடி அகற்றும் பயிற்சியின் போதும் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கான்கேர், கொண்டகான், நாராயண்பூர், பஸ்தார், தண்டேவாடா, சுக்மா மற்றும் பிஜாப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ்தர் பிரிவு, கடந்த காலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது பல கொடிய தாக்குதல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக கோடையில் நக்சல்கள் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு படையினர் எப்போதும் உஷார் நிலையில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? நாயின் கணிப்பு உண்மையாகுமா..?