Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ. 2000, இளைஞர்களுக்கு ரூ. 3000; கோலாரில் பிரச்சாரத்தை துவக்கிய ராகுல் காந்தி!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று கோலாரில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரத்தை துவக்கினார்.

Karnataka Election 2023: Rahul Gandhi insured 2000 to women, free power in Kolar
Author
First Published Apr 16, 2023, 8:03 PM IST | Last Updated Apr 16, 2023, 8:03 PM IST

கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று கோலாரில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரத்தை துவக்கினார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்கிறது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த 13ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று இந்த முறை மும்முனை போட்டி நடக்கவிருக்கிறது. இந்த மூன்று கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் இன்னும் சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது இருக்கிறது. காங்கிரஸில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கோலார் தொகுதி ஒதுக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அவருக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் கனகபுரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோலாரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது, ''எங்களுக்கு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 150 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள். அப்போதுதான் பாஜக காங்கிரஸ் ஆட்சியை உடைக்க முடியாது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன். காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். உங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட பணத்தை வைத்தே உங்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சியை கலைக்கின்றனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சிக்கு வரும். நம்முடைய அரசுதான் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில் நிறுவனங்களுக்கு உதவும். நரேந்திர மோடி தொழிலதிபர்களுக்குத்தான் உதவி செய்வார். வங்கியின் கதவுகளை தொழிலதிபர்களுக்குத்தான் திறப்பார்கள். ஆனால், நம்முடைய அரசு சிறிய கடை முதலாளிகள், சிறிய தொழிலதிபர்கள், ஏழைகள், தொழிலாளர்களுக்கு வங்கிகளின் கதவுகளை திறப்பார்கள். 

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர்.. தூண்டில் போட்ட காங்கிரஸ் - கர்நாடக பாஜகவில் உச்சகட்ட குழப்பம்

இமாச்சலபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகு, என்ன செய்ய வேண்டும் என்று முதல்வர்கள் என்னிடம் கேட்டார்கள். தேர்தலில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே வழங்க வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஓரிரு வருடங்கள் ஆகக் கூடாது என்று கூறினேன். 

கர்நாடகாவில் அளிக்கப்படும் வாக்குறுதிகளான பாக்ய ஜோதி திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம், க்ருஹலட்சுமி திட்டத்தின் கீழ் பெண் குடும்பத் தலைவர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ இலவச அரிசி, பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உதவித் தொகை, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 என முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அவர்களது  மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும். மத்திய அரசு இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை நீக்க வேண்டும். 

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அதானி உள்பட சில தொழிலதிபர்களுக்கு கொடுக்கும்போது, காங்கிரஸ் அரசால் ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு கொடுக்க முடியும் என்பதை பிரதமர் மோடிக்கு புரிய வைக்க வேண்டும். எப்போதெல்லாம் நான் மோடியை அதானியுடன் இணைத்துப் பேசுகிறோனோ அப்போதெல்லாம் நான் குறிவைக்கப்படுகிறேன். 

இதையும் படிங்க: சிபிஐ விசாரணைக்கு முன் வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. 144 தடை - அடுத்தடுத்து பரபரப்பு

"நான் நேரடியாக பேசும்போது, அவர்கள் (பாஜக) என்னை தகுதி நீக்கம், மிரட்டல் என்று பயமுறுத்துகிறார்கள். நான் பயப்பட மாட்டேன். ஷெல் நிறுவனத்திடமும் அதில் உள்ள ரூ. 20,000 கோடி நிதி யாருடையது என்று கேள்வி கேட்பேன். பதில் கிடைக்கும் வரை, அவர்கள் என்னை தகுதி நீக்கம் செய்யட்டும் அல்லது சிறையில் அடைக்கட்டும். அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திடீரென அவரது  நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகள் வந்துள்ளது. அதானியின் ஷெல் நிறுவனத்தில், சீன இயக்குநர் ஒருவர் முதலீடு செய்து இருக்கிறார். எந்த விசாரணையும் இல்லை. யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒரு கேள்வி எழுப்பினால், திசை திருப்பி என்னை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவர் என்று முத்திரை குத்துகிறார்கள்'' என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கோலாரில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, ''நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி அனைவரும் மோடி என்ற பெயரைக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருடர்களா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதை எதிர்த்து குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ.புருனேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். எங்கு பேசி தகுதி இழப்பு செய்யப்பட்டாரோ அதே இடத்தில் இருந்து இன்று ராகுல் காந்தி பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios