இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் வழித்தடம், 2027 ஆகஸ்ட் 15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக சூரத்-பிலிமோரா இடையே சேவை தொடங்கப்படும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் (மும்பை-அகமதாபாத்) வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
படிப்படியாகத் திறக்கப்படும் வழித்தடங்கள்
இந்தத் திட்டம் பல்வேறு கட்டங்களாகத் திறக்கப்பட உள்ளது. இது குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய விவரங்கள்:
முதல் கட்டமாக சூரத் - பிலிமோரா (Surat–Bilimora) இடையிலான 100 கி.மீ தூர வழித்தடம் ஆகஸ்ட் 2027-ல் திறக்கப்படும். பின்னர் அடுத்தடுத்த கட்டங்களில் வாபி-சூரத், வாபி-அகமதாபாத் மற்றும் தாணே-அகமதாபாத் வழித்தடங்கள் திறக்கப்படும்.
இறுதியாக மும்பை - அகமதாபாத் இடையிலான முழு வழித்தடமும் பயன்பாட்டுக்கு வரும்.
புல்லட் ரயில் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
மணிக்கு 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படும். 508 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில், முழுமையான சேவை தொடங்கியதும், மும்பையில் இருந்து அகமதாபாத்தை வெறும் 2 மணி 17 நிமிடங்களில் சென்றடையலாம்.
2017-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்களால் 2023-லிருந்து 2027-க்கு மாற்றியமைக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ரயில் பாதை ஜப்பானின் புகழ்பெற்ற 'ஷின்கான்சென்' (Shinkansen) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது. ரயில்கள் மோதிக்கொள்வதைத் தவிர்க்கும் 'கவாச்' (Kavach) பாதுகாப்பு கருவி மற்றும் அதிநவீன கட்டுப்பாட்டு அறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.


