பிரச்சாரத்தின் போது அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கான பாங்கு ஒலிப்பதைக் கேட்டு ராகுல் காந்தி தன் உரையை நிறுத்திவிட்டு, அமைதியாகக் காத்திருந்தார்.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிறகு, மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. பாஜக மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்தில் பிரச்சாரம் செய்துவருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அந்த மாநிலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திங்களன்று தும்கூருவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது மசூதியில் தொழுகைக்கான பாங்கு ஒலித்ததால் தனது உரையை சிறிது நேரம் நிறுத்தினார்.

சரத் பவார் ராஜினாமா! தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகல்

ராகுல் காந்தி பேச்சை இடையில் நிறுத்திய காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் காந்தியின் முதுகில் தட்டுவதைக் காணலாம், அதன் உடனே ராகுல் காந்தி தலையசைத்து தனது பேச்சை நிறுத்துகிறார்.

“…அதனால், மக்கள் மீதான அரசாங்கத்தின் பொறுப்பு அதுதான் என்று நான் உங்களிடம் சொன்னேன்" என்று விட்ட இடத்தில் இருந்தே தனது உரையை ஆரம்பித்தார்.

உரையை நிறுத்தி மௌனம் காத்தபோது கூட்டத்தில் சிலர் மேடையை நோக்கி கோஷம் எழுப்பினர். அவர்களை நோக்கிப் புன்னகைத்தபடியே ராகுல் காந்தி வாயில் விரலை வைத்துக் காட்டி அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கடந்த காலங்களில் பிரதமர் மோடியும், அருகில் உள்ள மசூதியில் தொழுகைக்கான பாங்கு ஒலிக்கும்போது உரையை நிறுத்தி அமைதி காத்திருக்கிறார். இருப்பினும், சமீபத்தில், கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, இஸ்லாமியர்கள் தொழுகையை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவதை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். "ஸ்பீக்கர் இல்லாமல் அல்லாவுக்கு பிரார்த்தனை காதில் விழாதா? அல்லா என்ன காது கேளாதவரா?" என்று அவர் பேசினார்.

முஸ்லிம்களை திருப்திபடுத்த பஜ்ரங் தளத்துக்குத் தடையா? காங். அறிவிப்பு குறித்து அசாம் முதல்வர் சீற்றம்