உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக தீபஸ் மிஸ்ரா  பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் நேற்று முன்தினத்தோடு முடிந்தது.  தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசு, ஜே.எஸ்.கேஹரிடம் கேட்டபோது, மூத்த நீதிபதி தீபக் மிஸ்ராவின்பெயரை  அவர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், 64 வயதான தீபக் மிஸ்ராதலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, குடியரசு தலைவர் மாளிகையில் மிக எளிமையாக இந்த பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  கடவுளின் பெயரால்  தீபக் மிஸ்ராஆங்கிலத்தில் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

2018ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி வரை தலைமை நீதிபதி பொறுப்பில் தீபக் மிஸ்ராஇருப்பார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 1977ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, ஒடிசா நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம், சிவில், கிரிமினல், வருவாய், சேவை, விற்பனை வரி என அனைத்துப் பிரிவுகளில் பயிற்சி எடுத்தார். அதன்பின் 1996ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக அமர்த்தப்பட்டார். முன்னதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.

64 வயதான தீபக் மிஸ்ரா இதற்கு முன் பாட்னா உயர் நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரிந்துள்ளார்.

 காவிரி, கிருஷ்ணா ஆற்றுநீர் பங்கிட்டு விவகாரம், பி.சி.சி.ஐ. சீர்திருத்தங்கள், சஹாரா வழக்கு உள்ளிட்டவற்றை விசாரணை செய்யும் உச்ச நீதிமன்ற அமர்வில் பணியாற்றி வந்த தீபஸ் மிஸ்ரா இருந்து வருகிறார்.

நாடுமுழுவதும் திரையரங்களில் தேசிய கீதத்தை கண்டிப்பாக பாட வேண்டும் என்ற உத்தரவை, தீபக் மிஸ்ரா பிறப்பித்தார். மேலும், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா கூட்டுபலாத்கார வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு சிறை தண்டனையும் அளித்தவர் நீதிபதி தீபஸ் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.