இந்தியாவில் சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா தயாரிப்புகளுக்கான வரி அமைப்பை மத்திய அரசு மாற்றியுள்ளது. பிப்ரவரி 1 முதல், ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் முறைக்கு பதிலாக, பான் மசாலாவுக்கு சுகாதார செஸ், புகையிலைக்கு கூடுதல் கலால் வரி விதிக்கப்பட உள்ளது.
நாட்டில் சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா தயாரிப்புகளுக்கான வரி அமைப்பை மத்திய அரசு அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. இதன்படி, வரும் பிப்ரவரி 1, 2026 முதல் இந்தத் தயாரிப்புகளுக்குக் கூடுதல் வரி மற்றும் புதிய செஸ் (Cess) விதிக்கப்பட உள்ளது.
மாற்றப்படும் வரி முறை
தற்போது இந்தத் தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி (GST) வரியுடன் 'ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ்' (Compensation Cess) வசூலிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 1 முதல் இந்த இழப்பீட்டு செஸ் முறை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் புதிய வரிகள் அமலுக்கு வரும்:
பான் மசாலா: இதற்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் (Health and National Security Cess) விதிக்கப்படும்.
புகையிலை பொருட்கள்: சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளுக்கு கூடுதல் கலால் வரி (Additional Excise Duty) விதிக்கப்படும்.
புதிய ஜிஎஸ்டி விகிதங்கள்
அரசின் அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவை 40% ஜிஎஸ்டி பிரிவின் கீழ் வரும். பீடிக்கு மட்டும் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
இந்த ஜிஎஸ்டி வரிக்கு மேலதிகமாகவே மேலே குறிப்பிட்ட புதிய கலால் வரி மற்றும் சுகாதார செஸ் வசூலிக்கப்படும் என்பதால், இவற்றின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
கண்காணிப்புக்கு சிசிடிவி கட்டாயம்!
புகையிலை மற்றும் குட்கா உற்பத்தியில் வரி ஏய்ப்பைத் தடுக்க மத்திய நிதி அமைச்சகம் புதிய விதிமுறைகளை (Rules 2026) அறிவித்துள்ளது:
குட்கா மற்றும் புகையிலை பொட்டலமிடும் (Packing) இயந்திரங்கள் இருக்கும் பகுதிகளில் உற்பத்தியாளர்கள் கட்டாயம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். இந்த வீடியோ பதிவுகளைக் குறைந்தது 24 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வேகம் மற்றும் உற்பத்தித் திறன் குறித்த விபரங்களை பிப்ரவரி 7-க்குள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏன் இந்த மாற்றம்?
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் இதற்கான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், அதற்கான மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் இந்த 'சுகாதார வரி' உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.


