மத்திய அரசு 'மத்திய கலால் (திருத்தம்) மசோதா, 2025'-ஐ நிறைவேற்றியுள்ளதால், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலை கணிசமாக உயரவுள்ளது. இந்த வரி உயர்வு, அரசின் வருவாயை அதிகரிப்பதோடு, புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய அரசு புகையிலை மற்றும் சிகரெட் பொருட்கள் மீதான கலால் வரியை (Excise Duty) திருத்துவதற்கான 'மத்திய கலால் (திருத்தம்) மசோதா, 2025'-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தாக்கல் செய்த இந்த மசோதா, சிகரெட், சுருட்டு, ஹூக்கா, ஜர்தா மற்றும் மெல்லும் புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கான வரி கட்டமைப்பை மாற்றுகிறது.

புதிய வரி விகிதம்

1,000 சிகரெட்டுகளுக்கு இதுவரை ரூ.200 முதல் ரூ.735 வரை இருந்த வரி, இனி அதன் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து ரூ.2,700 முதல் ரூ.11,000 வரை உயர்த்தப்பட உள்ளது.

மெல்லும் புகையிலைக்கான வரி 25%-லிருந்து 100% ஆகவும், ஹூக்கா புகையிலைக்கான வரி 25%-லிருந்து 40% ஆகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

விலை எவ்வளவு உயரும்?

தற்போது சந்தையில் ரூ.18-க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை எதிர்காலத்தில் ரூ.72 வரை உயரக்கூடும் என சில அதிகாரிகள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உயர்வு நேரடியாக இருக்காது என்றும், கலால் வரியை அரசு எப்படி அமல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே இறுதி விலை அமையும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஒருவேளை வரி உயர்வு முழுமையாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்பட்டால், சிகரெட் விலை 4 மடங்கு வரை உயரக்கூடும். ஆனால், சில நிபுணர்கள் விலை ரூ.20 முதல் ரூ.28 வரை மட்டுமே உயர வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர்.

ஏன் இந்த திடீர் வரி உயர்வு?

ஜிஎஸ்டி (GST) இழப்பீட்டு செஸ் வரி காலம் முடிவடைய உள்ளதால், அரசின் வருவாயைப் பாதுகாக்கவும் நிதி நெகிழ்வுத்தன்மையை உருவாக்கவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

புகையிலை பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கவும் விலை உயர்வை ஒரு கருவியாக அரசு பயன்படுத்துகிறது.

சிகரெட் விலையில் 75% வரியாக இருக்க வேண்டும் என்பது WHO-வின் பரிந்துரை. இந்தியாவில் தற்போது இது 53% ஆக மட்டுமே உள்ளது. இதனை உயர்த்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.