திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத், மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவை பாஜக வெளியிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரின் போது, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்பி கீர்த்தி ஆசாத் இ-சிகரெட்டை பயன்படுத்தி புகைப் பிடித்தாகக் கூறி பாஜக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் குற்றச்சாட்டு

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கையில் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, பாஜக எம்பி அனுராக் தாக்கூர், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இது குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள் பகிரங்கமாக இ-சிகரெட் பயன்படுத்தியதை மற்ற உறுப்பினர்களும் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இந்தியாவில் 2019-ம் ஆண்டு சட்டப்படி இ-சிகரெட் உற்பத்தி மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், நாட்டின் உயரிய சட்ட சபையான நாடாளுமன்றத்திலேயே எம்பி ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டது விவாதப் பொருளாகியுள்ளது.

பாஜக-வின் விமர்சனம்

"விதிகளும் சட்டங்களும் இவர்களைப் போன்றவர்களுக்குப் பொருட்டே இல்லை. நாடாளுமன்றத்தில் புகைப்பிடிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தனது எம்பியின் இந்த தவறான நடத்தை குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்," என்று அமித் மாளவியா பதிவிட்டுள்ளார்.

மக்களவை செயலக வட்டாரங்களின்படி, இந்தப் புகார் மிகவும் தீவிரமாகக் கருதப்படுகிறது. அவையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.