சிகரெட் முதல் கார் வரை! 40 சதவீத ஜிஎஸ்டி வரியை போட்டுத்தாக்கிய நிர்மலா சீதாராமன்!
பல அன்றாடப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்ட நிலையில், குட்கா, சிகரெட், சொகுசு கார்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்.

பல அன்றாட பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான வரியை குறைத்த கையோடு குட்கா, சிகெரட், சொகுசு கார் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி வரி 40 சதவீதமாக அதிகரித்ததை அடுத்து இதன் விலைகள் விரைவில் உயரப்போகிறது. சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பரிசு உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரிய மாற்றம் ஏற்படப்போவதால் எந்தெந்த விலை குறையப்போகுது, எதன் விலை உயரப்போகுது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் சுமார் 11 மணி நேரம் வரை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு இல்லை என்று அறிவித்த கையோடு சிகரெட் போன்ற ஆபத்தான பொருட்கள் மீதான வரியை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்தார்.
அதாவது புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா, சிகரெட், ஜர்தா உள்ளிட்ட சுவிங் புகையிலை பொருட்கள், பீடி, சுருட்டுகள், சிகரிலோக்கள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை மற்றும் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களுக்கான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆடம்பரமான கார்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், Dutiable தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
1200cc க்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜினக்களின் மற்றும் 1500cc டீசல் இன்ஜின்கள் கொண்ட சொகுசு மற்றும் பிரீமியம் கார்கள், 350cc க்கு மேல் இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், படகுகள் (Yachts), ஹெலிகாப்டர்கள், தனியார் ஜெட்கள், தனிப்பட்ட கப்பல்கள், ரிவால்வர்கள் மற்றும் பிஸ்டல்கள் மற்றும் இனிப்பு கலந்த பொங்கல் உள்ளிடவைகளுக்கு ஜிஎஸ்டி வரியும் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.