பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!
குடும்பத்தினர் எதிர்த்தாலும், இந்த காதலர்கள் ஒன்று சேர கேரளாவின் ஆளும் கட்சித் தலைவர்கள் உதவி செய்தனர். கும்பமேளாவில் வைரலான இந்த பெண், சரியாக கும்ப மாதத்திலேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரளாவில் மோனலிசா திருமணம்
பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம் சோஷியல் மீடியாவில் ஒரே இரவில் பிரபலமான இந்தூர் பெண் மோனி போன்ஸ்லே என்கிற மோனலிசா, தனது காதலர் ஃபர்மான் கானை கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள அருமானூர் ஸ்ரீ நைனார் கோயிலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என போலீசில் புகார் கொடுத்த அதே நாளில், திடீரென மோனலிசா - ஃபர்மான் கான் திருமணம் நடந்துள்ளது.
பெற்றோர் எதிர்ப்பு; கேரளாவில் தஞ்சம்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்தவர் மோனலிசா. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஃபர்மான் கான். இருவரும் இன்று காலை திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பாதுகாப்பு கேட்டனர். 'என் அப்பா என்னை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க வற்புறுத்துகிறார். வேறு மதத்தைச் சேர்ந்தவரை காதலிப்பதற்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு இருக்கிறது' என மோனலிசா தனது புகாரில் தெரிவித்திருந்தார். சினிமா ஷூட்டிங்கிற்காக கேரளா வந்திருந்த அவர், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனக்கு பாதுகாப்பு தருமாறு போலீசாரிடம் கேட்டிருந்தார்.
கும்ப மாதத்திலேயே திருமணம்
குடும்பத்தினர் எதிர்த்தாலும், இந்த காதலர்கள் ஒன்று சேர கேரளாவின் ஆளும் கட்சித் தலைவர்கள் உதவி செய்தனர். அருமானூர் கோயிலில் நடந்த திருமணத்தில், சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், அமைச்சர் வி. சிவன்குட்டி, ராஜ்யசபா எம்.பி. ஏ.ஏ. ரஹீம் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தினர். கும்பமேளாவில் வைரலான இந்த பெண், சரியாக கும்ப மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டது இந்த திருமணத்தின் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகப் பார்க்கப்பட்டது.
இதுதான் உண்மையான 'கேரள ஸ்டோரி'
திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஏ.ஏ. ரஹீம், "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள், அந்த சொர்க்கமே இந்த கேரளா தான். யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட சுதந்திரம் கேரளாவில் மட்டுமே சாத்தியம். இந்த ஜோடியை வாழ்த்துவதற்காக சிபிஎம் இங்கு வந்துள்ளது" என்றார். அப்போது பேசிய அமைச்சர் வி. சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரள ஸ்டோரி" என்று குறிப்பிட்டார்.

