- Home
- இந்தியா
- பேருந்தில் சில்மிஷம்..? வாலிபரின் உயிரை பறித்த வைரல் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை..? அதிரடி காட்டும் கேரளா போலீஸ்
பேருந்தில் சில்மிஷம்..? வாலிபரின் உயிரை பறித்த வைரல் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை..? அதிரடி காட்டும் கேரளா போலீஸ்
ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய வாலிபர் தற்கொலை விவகாரத்தில் வீடியோவை வைரலாக்கிய இளம்பெண் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு நிரூபனமானால் இளம்பெண் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இணையத்தில் வைரலான பேருந்து வீடியோ
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்ணூர் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தீபக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண் தான் பதிவு செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்தார். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட சில தினங்களிலேயே வீடியோ மிகவும் வைரலானது.
தீபக் அப்படிப்பட்ட நபர் இல்லை
வைரல் வீடியோவைப் பார்த்த பலரும் தீபக்கின் செயலுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். மேலும் தீப்க்கை கைது செய்ய வேண்டும், சிறை தண்டனை அளிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். ஆனால் தீபக் பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் நபர் கிடையாது. சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே ஷிம்ஜிதா பொய்யான குற்றச்சாட்டோடு அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளதாகவும், தான் அப்பெண்ணிடம் தவறாக நடக்கவில்லை என்றும் தீபக் தனது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விபரீத முடிவெடுத்த தீபக்
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி தீபக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் வீடியோவை வைரலாக்கிய இளம் பெண் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தீபக் தற்கொலைக்கு பின்னர் இளம் பெண்ணுக்கு எதிரான கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து ஷிம்ஜிதா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீபக்கின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உறவினர் வீட்டில் பதுங்கிய ஷிம்ஜிதா
காவல் துறையினரின் விசாரணையில் ஷிம்ஜிதா வடகரையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
10 ஆண்டுகள் சிறை..?
ஷிம்ஜிதா மீது காவல் துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

