சம்பளத்தோட ஒரு மாசம் லீவு.. இப்படி ஒரு பாஸ் கிடைச்சா வேற என்ன வேணும்? செம வைரல் செய்தி!
Bingelabs இணை நிறுவனர் திவ்யே அகர்வால், தாயாரின் உடல்நலக்குறைவுக்காக ஒரு பெண் ஊழியருக்கு நிபந்தனையின்றி ஒரு மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கினார். இந்த மனிதாபிமான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கார்ப்பரே் உலகில் நடந்த அதிசயம்
இன்றைய கார்ப்பரேட் உலகில் வேலைப்பளுவும், இலக்குகளும் (Targets) ஊழியர்களை நெருக்கடிக்குள்ளாக்கி வரும் நிலையில், மனிதாபிமானத்துடன் செயல்பட்ட இந்தியத் தொழிலதிபர் ஒருவரின் செயல் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
'Bingelabs' என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யே அகர்வால் (Divye Agarwal), தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
தாயாரைக் கவனித்துக்கொள்ள ஒரு மாதம் விடுப்பு தேவைப்பட்ட நிலையில், அந்த ஊழியர் தயக்கத்துடன் விடுப்புக் கேட்டுள்ளார். மேலும், வேலையை ஈடுகட்ட தான் மாலை நேரங்களில் பணியாற்றுவதாகவும், கால்களில் (Calls) எப்போதும் இணைப்பில் இருப்பேன் என்றும் அந்த ஊழியர் சமாதானம் கூறியுள்ளார்.
நிபந்தனையற்ற விடுப்பு
ஆனால், திவ்யே அகர்வால் எந்தவித நிபந்தனையும் இன்றி, ஒரு மாத காலச் சம்பளத்துடன் கூடிய விடுப்பை (Paid Leave) அவருக்கு வழங்கினார்.
"அவர் ஆச்சரியத்தில் உறைந்து போனார். நாங்கள் ஏதோ நிபந்தனை விதிக்கப்போகிறோம் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு முக்கியத் திட்டங்கள் (Projects) தாமதமானாலும், பணியைப் பகிர்ந்து கொண்டு நிலைமையைச் சமாளித்தோம்," என திவ்யே தெரிவித்துள்ளார்.
மீண்டும் பணியில் சேர்ந்த ஊழியர்
விடுப்பு முடிந்து அந்தப் பெண் ஊழியர் மீண்டும் பணிக்குத் திரும்பியபோது, முன்னைவிட அதிக ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் செயல்பட்டதாகத் திவ்யே குறிப்பிட்டுள்ளார். அந்த ஆண்டு நிறுவனத்தின் மிகச்சிறந்த பணிகளில் சிலவற்றை அந்த ஊழியர் வெற்றிகரமாகச் செய்து முடித்தாராம்.
"நாங்கள் அவருக்கு உதவி செய்தோம் என்பதற்காக அவர் நன்றிக்கடனாக இதைச் செய்யவில்லை. தங்களுக்கு ஆதரவாக நிறுவனம் இருக்கிறது என்பதை அவர் முழுமையாக நம்பியதே இந்த மாற்றத்திற்குக் காரணம்," என்று திவ்யே நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பலரும் திவ்யே அகர்வாலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
• "விளம்பரத் துறையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கணக்கு பார்க்கும் சூழலில், இது மிகவும் அரிய செயல்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
• "நிறுவனத்தின் கலாச்சாரம் என்பது சுவரொட்டிகளில் இருப்பதல்ல, இக்கட்டான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் இருக்கிறது," என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.
• "தலைமைப்பண்பு என்பது சொல்வதில் இல்லை, செய்வதில் இருக்கிறது," என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

