கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், இது கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. மிக முக்கியமாக கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா மேயராக பதவியேற்க உள்ளார்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி

திருவனந்தபுரம் மாநகராட்சி சுமார் 45 ஆண்டுகளாக இடது சாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பாஜக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்ததை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். மேலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) கூட்டணியை அவர் கடுமையாக சாடினார்.

திருவனந்தபுரத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ''திருவனந்தபுரத்திற்கு நன்றி. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ பெற்ற இந்த வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும். மாநிலத்தின் வளர்ச்சி அபிலாஷைகளை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எங்கள் கட்சி இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்'' என்றார்.

வளர்ச்சியடைந்த கேரளம் உருவாக்கப்படும்

பிரதமர் மோடி மற்றொரு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றிகள். யு.டி.எஃப் மற்றும் எல்.டி.எஃப்-ஆல் கேரளா சோர்வடைந்துள்ளது. நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் வளர்ச்சியடைந்த கேரளம் உருவாக்க என்.டி.ஏ மட்டுமே ஒரே வழி என்பதை அவர்கள் பார்க்கிறார்கள்'' என்று கூறியுள்ளார்.