- Home
- இந்தியா
- கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை கைப்பற்றி பாஜக மாஸ் காட்டியுள்ளது. கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயராக பதவியேற்க உள்ளார்.

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
நமது அண்டை மாநிலமான கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை சூறையாடி வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி பெரும் இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
திருவனந்தபுரத்தை தட்டித் துக்கிய பாஜக
அதாவது இப்போது வரை கொல்லம், திருச்சூர், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டும் வெற்றி பெற உள்ளது.
மேலும் கேரள உள்ளாட்சித் தேர்தலில் அசத்தி வரும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியை தட்டித் தூக்கி காங்கிரசுக்கும், ஆளும் கட்சிக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
1193 வார்டுகளில் பாஜக வெற்றி
நகராட்சிகளை பொறுத்தவரை 54 நகராட்சிகளில் காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியும், 28 நகராட்சிகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதேபோல் 505 கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணியும், 341 கிராம பஞ்சாயத்துகளில் ஆளும் கட்சி கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. கேரள உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1193 வார்டுகளில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது.
திரிச்சூரில் பாஜக முஸ்லீம் வேட்பாளர் வெற்றி
திரிச்சூர் மாநகராட்சியில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியின் மும்தாஜ் தாஹா வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் முஸ்லீம் வேட்பாளரான இவர் காங்கிரஸ், ஆளும் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மேலும் கேரள மாநில பாஜக மகளிர் அணி தலைவி நவ்யா ஹரிதாஸ் கோழிக்கோடு மாநகராட்சியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
நடிகர் திலகனின் மகன் திருப்பணித்துறையில் வெற்றி
இது மட்டுமின்றி திருப்பணித்துறை நகராட்சி திருவாங்குளம் வார்டில் போட்டியிட்ட நடிகர் திலகனின் மகன் ஷிபு திலகன் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளார். இதேபோல் பாலக்காடு, திருப்பணித்துறை நகராட்சிகளையும் பாஜக தட்டித் தூக்கியுள்ளது. இது எல்லாவற்றையும் விட உச்சமாக கேரளாவின் தலைநகரும், அரசியல் அதிகார மையமுமான திருவனந்தபுரத்திலும் பாஜக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
திருவனந்தபுரத்தில் மாஸ் காட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 50 இடங்களை தட்டித் தூக்கிய பாஜக மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் சாஸ்தாமங்கலம் பிரிவில் வெற்றி பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயராக பதவியேற்க உள்ளார்.
கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, கேரள காவல்துறைக்கு தலைமை வகித்த முதல் பெண் ஆவார். 65 வயதான இவர் 2020 இல் டிஜிபியாக ஓய்வு பெற்றார்.
பெண் சிங்கம் ரெய்டு ஸ்ரீலேகா
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் இணைந்த ஸ்ரீலேகாவுக்கு பாஜக தலைமை உள்ளாட்சி தேர்தலில் போட்டியியும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து வெற்றி பெற்று திருவனந்தபுரம் மேயராக பதவியேற்க உள்ளார் இந்த பெண் சிங்கம்.
தன்னுடைய துறையில் சிறந்து விளங்கிய ஸ்ரீலேகா, போக்குவரத்து ஆணையராக இருந்த காலத்தில் சாலை விபத்துகளைக் குறைத்ததற்காக பெரும் பாராட்டுகளை பெற்றார். சிபிஐயில் பணியாற்றியபோது தனது சிறப்பான செயல்திறனுக்காக அவர் "ரெய்டு ஸ்ரீலேகா" என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

