திருவனந்தபுரத்தில் பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் நகர மாநகராட்சியில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளாவில் இரண்டு கட்ட உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. மாநகராட்சி தேர்தல் முடிவுகளின் போக்குகள் கேரள நகர்ப்புற அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆறு மாநகராட்சிகளில் நான்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை வகிக்கிறது.
கொல்லம், கொச்சி மற்றும் திருச்சூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை பெற்றுள்ளது. கண்ணூரில் காங்கிரஸ் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் பாஜக தலைமியிலான என்டிஏ முன்னிலை பெற்றுள்ளது. தலைநகரில் அதன் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி என்பது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். ஏனெனில், பாஜக கேரளாவில் இன்னும் ஒருமுறைகூட அரசாங்கத்தை அமைக்கவில்லை.
திருவனந்தபுரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. 101 வார்டுகளில் 50 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் பெரும்பான்மை மதிப்பெண் 51 ஆகும். சில மணி நேரங்களுக்குள் பாஜக இந்த இடத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு எம்.பி.யாக காங்கிரஸைச் சேர்ந்த சசி தரூர் உள்ளார். அவர் காங்கிரஸிலிருந்து விலகி இருப்பது இப்போது விவாதிக்கப்படுகிறது.
கேரள நகராட்சிகளில் பாஜகவின் வெற்றி கலவையாக உள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், திருச்சூர் மாநகராட்சி, கொடுங்கல்லூர், ஷோரனூர் நகராட்சிகள் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்றும் பாஜகவின் நம்பிக்கைகள் ஈடேறவில்லை. இத்தனைக்கும் திருச்சூர் பாஜக அமைச்சரும் எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் தொகுதி.

2025 கேரள நகராட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வெற்றிக்கு சசி தரூர் வாழ்த்து தெரிவித்தார். ‘‘திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களின் மகத்தான வெற்றிகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பல வாழ்த்துக்கள். இது மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு பெரிய ஒப்புதல் மற்றும் வலுவான சமிக்ஞையாகும்" என்று அவர் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

மேலும் அவர், "திருவனந்தபுரத்தில் பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் நகர மாநகராட்சியில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தலைநகரின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறன். 45 ஆண்டுகால ஐக்கிய ஜனநாயக முன்னணி தவறான ஆட்சியிலிருந்து ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன். ஆனால் வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியில் தெளிவான மாற்றத்தைக் கோரிய மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

