ஜெயலலிதாவின் வலது கரம் டிடிவி.. தினகரனை வானளாவப் புகழ்ந்த அண்ணாமலை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வலதுகரமாக செயல்பட்டவர் டிடிவி தினகரன் என குறிப்பிட்டு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்திய அண்ணாமலை
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அதற்கு முன்பு வரை பாஜக எதிர்ப்பு மனநிலையில் செயல்பட்ட தினகரன், அண்ணாமலை மாநிலத்தலைவராக வந்த பின்னர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறினார். மேலும் அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றதில் அண்ணாமலைப் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று சொல்லப்பட்டது.
தினகரன், அண்ணாமலை நட்பு
ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மாநிலத் தலைவர் மாற்றம், கூட்டணிக்குள் அதிமுக என அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் அரங்கேறின. மேலும் கூட்டணியில் தொடர்ந்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் இருவருமே கூட்டணியில் இருந்து வெளியேறினர். கூட்டணி முறிந்தாலும் அண்ணாமலை, தினகரனின் நட்பு தற்போது வரை நெருக்கமாக இருந்து வருகிறது.
ஜெயலலிதாவின் வலது கரம்..
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் அவரது வலதுகரமாகத் திகழ்ந்தவர்.
அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

