இந்தியாவில் உள்ள  13 மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும்  மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை காலம் தொடங்கிய  நிலையில் நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அதே நேரத்தில் கடந்த வாரம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயல் மற்றும் பலத்த மழையில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆந்திரா மற்றும், தெலங்கான மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது அக்னி நட்சத்திர வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கிறது. வரும் 28 ஆம் தேதி வரை வெயில் அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில்  அடுத்த இரண்டு  நாட்களுக்கு  வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர், இமாச்சல பிரதே மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை , புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாபின் ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மசோரம், மற்றும் திரிபுராவில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி மற்றும்உ.பி.,யின் மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் மழை மற்றும் புழுதிப்புயல் வீசக்கூடும். என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று வெப்பம் அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.