Asianet News TamilAsianet News Tamil

5,785 கோடி சொத்து... நாட்டின் நம்பர் 1 பணக்கார வேட்பாளர்! இவர் யாருன்னு தெரியுமா?

சந்திரசேகர் தனக்கு அமெரிக்காவில் ரூ.605.57 கோடி சொத்து இருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களிலும் இவருக்கு முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. அமெரிக்காவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.

With Rs 5,785 Crore Assets, This Lok Sabha Contestant Is Wealthiest So Far sgb
Author
First Published Apr 23, 2024, 10:28 PM IST

குண்டூர் மக்களவைத் தொகுதிக்கான தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பி. சந்திரசேகர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது குடும்பச் சொத்துகள் ரூ.5,785 கோடி என அறிவித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது தனிப்பட்ட சொத்து ரூ.2,448.72 கோடியாக உள்ளது. அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி சொத்துக்களும், குழந்தைகளிடம் ரூ.1,000 கோடி சொத்துகளும் உள்ளன.

மேலும், சந்திரசேகர் தனக்கு அமெரிக்காவில் ரூ.605.57 கோடி சொத்து இருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களிலும் இவருக்கு முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன. அமெரிக்காவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவு வரைக்குமான செய்திக்குறிப்பின்படி, சுமார் ரூ.717 கோடி சொத்துடன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் பணக்கார முதலிடம் பிடித்தார்.

இப்போது அவரை சந்திரசேகர் முந்தியுள்ளார். இவரது குடும்பம் லைன் ஆஃப் கிரெடிட் முறையில் அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியில் ரூ.1,138 கோடி மதிப்பலான பங்குகளை வைத்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புர்ரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த இவர் டாக்டர், தொழில்முனைவோர், அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர். இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். UWorld என்ற ஆன்லைன் கற்றல் தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

விஜயவாடாவின் என்டிஆர் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் 1999இல் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். 2005இல் பென்சில்வேனியாவின் டான்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்.டி. படிப்பை முடித்தார்.

நாட்டிலேயே மிகவும் கடினமான போட்டித் தேர்வாகக் கருதப்படும் EAMCET மருத்துவ நுழைவுத் தேர்வில் (MBBS) வெற்றி பெற்றவர். சுமார் 60,000 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 27வது ரேங்க் எடுத்தவர்.

பொதுச் சேவையில் ஆர்வமுள்ள சந்திரசேகர், 2010ஆம் ஆண்டு முதல் தெலுங்கு தேசம் கட்சியின் என்ஆர்ஐ பிரிவின் சார்பாக கட்சியின் பல நலத்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரசராவ்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பியபோதும், தெலுங்கு தேசம் கட்சி இவருக்குப் பதிலாக ஆர். சாம்பசிவ ராவுக்கு அந்தத் தொகுதியில் சீட் கொடுத்தது. இந்த தேர்தலில் குண்டூரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கே. வெங்கட ரோசய்யாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios