தூதுவளை ரசம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரசம் என்பது தென்னிந்தி உணவுகளில் மிகவும் பிரபலமான சுவையான மற்றும் சத்தானதாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த உடல் தேவைகளையும் பூர்த்தி செய்யும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. ரசத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் தூதுவளை ரசம்.

தூதுவளையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும் இது பிரபலமான மூலிகை செடியாகும். இந்த தூதுவளையில் ரசம், துவையல், சூப் என பல வகைகளில் தயாரித்து சாப்பிடலாம். ஆனால் நிறைய பேர் தூதுவளையில் ரசம் வைத்து சாப்பிட விரும்புவார்கள். இப்போது தூதுவளை ரசம் செய்வது எப்படி என்றும் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தூதுவளை ரசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

தூதுவளை இலை - ஒரு கைப்பிடி 

பூண்டு - 8 

புளி - எலுமிச்சை அளவு 

மஞ்சள் தூள் - சிறிதளவு 

வரமிளகாய் - 2 

மிளகு - 1 ஸ்பூன் 

தனியா - 1 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

பெருங்காயம் - அரை ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

கறிவேப்பிலை - சிறிதளவு 

கொத்தமல்லி தழை - சிறிதளவு 

கடுகு - சிறிதளவு 

எண்ணெய் - தேவைக்கு 

தண்ணீர் - தேவைக்கு

தூதுவளை ரசம் தயாரிக்கும் முறை :

முதலில் தூதுவளை இலையின் பின்புறத்தில் இருக்கும் முட்களை நீக்கிவிட்டு பிறகு அதை உடலில் போட்டு நன்றாக இடிக்கவும். இல்லையெனில் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். புளியையும் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளுங்கள். அடுத்து சீரகம், தனியா, வரமிளகாய், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு இடித்து வைத்த தூதுவளையையும் சேர்க்கவும். அதன் வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பிறகு புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்க்கவும். லேசாக கொதிக்கும் போது அரைத்து வைத்த பொடி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து இறக்கிவிடவும். பிறகு கொத்தமல்லி இலையை தூவி விடவும். அவ்வளவுதான் சூப்பரான மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை ரசம் ரெடி.

தூதுவளை ரசத்தின் ஆரோக்கிய நன்மைகள் :

- சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, சைனஸ் தொற்றுகள் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே குணமாக்க உதவுகிறது.

- இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

- பசியை தூண்டி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

- உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்கும் பண்புகள் இதில் உள்ளன.

- தூதுவளையில் கால்சியம் அதிகமாகவே உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

- தூதுவளை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

- புற்று நோய்களுக்கு எதிராக இது அதிகமாக செயல்படுவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.