மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆறு மூலிகை டீ வகைகள் குறித்தும் அதன் தயாரிப்பு முறை மற்றும் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மழைக்காலம் தொடங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் பிரச்சனை சளி, இருமல், காய்ச்சல். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்தத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை சூடாக வைத்திருக்கவும் மூலிகை டீக்கள் சிறந்த பானமாக அமைகின்றன. இவை இயற்கையான முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும் உதவுகின்றன. மழைக்காலத்திற்கு ஏற்ற ஆறு மூலிகை டீ வகைகள் குறித்தும், அவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பலன்கள் குறித்தும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
கற்பூரவள்ளி டீ
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இதில் கற்பூரவள்ளி இலைகளையும், துருவிய இஞ்சியையும் சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். கற்பூரவள்ளி இலைகள் நன்றாக வெந்து அதன் சாறு தண்ணீரில் இறங்கும் வரை காத்திருக்கவும். பின்னர் இதை வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பரிமாறலாம். கற்பூரவள்ளி இலைகளுக்கு சுவாசப் பிரச்சனைகளை போக்கும் தன்மை உண்டு. இது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறலை சரி செய்கிறது. இதில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்க உதவுகின்றன. இந்த டீ உடலை சூடாக வைத்து குளிர் காலத்திற்கு இதமான உணர்வைத் தருகிறது.
துளசி டீ
துளசி டீ தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் துளசி இலைகளை சேர்ந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருக்கவும். சாறு நன்றாக இறங்கிய பின் தீயை அணைத்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சூடாக பரிமாறவும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் சளி மற்றும் காய்ச்சலை தடுக்க உதவுகின்றன. சளி காரணமாக தொண்டை வலி இருப்பவர்களுக்கு இந்த டீ இதமான உணர்வைத் தந்து தொண்டை வலியை சரி செய்யவும், இருமலைப் போக்கவும் உதவுகின்றன. மேலும் துளசி கிருமிநாசியாகவும் செயல்படுகிறது. துளசியின் இயற்கையான பண்புகள் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.
இஞ்சி-ஏலக்காய் டீ
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானவுடன் துருவிய இஞ்சியையும், நசுக்கிய ஏலக்காயையும் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பரிமாறலாம். இஞ்சி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்று உப்புசத்தை தடுக்க உதவுகிறது. மழைக்காலத்தில் பலருக்கும் செரிமான கோளாறுகள் ஏற்படும். இஞ்சி ஏலக்காய் டீ இந்த பிரச்சனைகளை அடியோடு குறைத்து விடும். இதில் இருக்கும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உடலில் ஏற்படும் வலிகளை குறைக்கவும், அலர்ஜியை எதிர்த்து போராடவும் உதவி புரியும். ஏலக்காய் உடலை சூடாக வைத்து உடல் வெப்பநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
மிளகு-சீரக டீ
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் நசுக்கிய மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பரிமாறவும். மிளகு தொண்டையில் உள்ள கபத்தை அகற்றி சளியை போக்க உதவுகிறது. சீரகம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது. மிளகு மற்றும் சீரகம் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மழைக்காலத்தில் பெரியவர்களுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறுகளுக்கு மிளகு சீரக டீ நல்ல நிவாரணத்தை அளிக்கிறது.
புதினா எலுமிச்சை டீ
பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து நன்கு கொதித்தவுடன் 10 புதினா இலைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். புதினா இலைகளின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதை வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பரிமாறலாம். புதினா வயிற்று உபாதைகளை போக்கி செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. எலுமிச்சையும் புதினாவும் இணையும் பொழுது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் கிராம்பு டீ
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்க வேண்டும். இதில் மஞ்சள் தூள் மற்றும் கிராம்பை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். வடிகட்டிய பிறகு தேன் கலந்து பரிமாறலாம். மஞ்சள் கிழங்கு இருந்தால் அதை துருவியும் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் அலர்ஜியை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கிராம்பு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களை எதிர்க்க உதவுகிறது. மஞ்சள் மற்றும் கிராம்பு இரண்டும் இணையும் பொழுது உடல் வலிகளை போக்க உதவுகின்றன.
இந்த டீ வகைகள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் உடலை வலுவாக்கி நோய் தொற்றுக்களை தடுக்கும். தொண்டைப்புண், தொண்டை வலி, சளி, இருமல் ஆகியவற்றை குறைக்கும். மழைக்காலத்தில் உடலை சூடாக வைத்து குளிரால் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும். மூலிகைகளின் மனமும், சுவையும் மனதை புத்துணர்ச்சியாக்கி, மன அழுத்தத்தை குறைக்கும். மூலிகை டீயை அளவாகப் பருக வேண்டும். அதிகப்படியான உட்கொள்ளால் சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் இந்த வகை டீக்களில் பால் சேர்க்கக்கூடாது. கர்ப்பிணிகள் அல்லது பிற சிகிச்சைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம். இந்த டீ வகைகள் மழைக்காலத்தில் உங்களை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.
