இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் பலரும் ஏதாவது ஒரு உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இவற்றில் மிக அதிகப்படியான தனிமை காரணமாகவும் சிலர் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்வது உண்டு. ஒருவர் தனிமையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கான அறிகுறிகள் இதோ...

வெளி உலகிற்கு நாம் சாதாரண மனிதர்களாக நம்மை காட்டி கொள்ளகிறோமே தவிர தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஒரு விதமான உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. மன அழுத்தத்திற்கு அடுத்த படியாக அதிகமானவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சனை என்றால் அது தனிமையால் பாதிக்கப்பட்டிருப்பது தான். தனிமை உளவியல் பாதிப்பா? என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் ஒருநாளில் அதிகமான நேரத்தை தனிமையில் மட்டுமே கழிக்கிறார் என்றால், அந்த நிலைமை தொடர்ந்தால் கண்டிப்பாக அது நம்மையும் அறியாமல் பலவிதமான உளவியல் பிரச்சனைகளை உருவாக்கி விடும். நீங்கள் மிக ஆழ்ந்த தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த அறிகுறிகள் உங்களிடமும் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

தனிமை பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள் :

1. மற்றர்களிடம் உங்களை பற்றிய விஷயங்களை அதிகமாக பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள். உங்களுக்கு எதிரில் இருப்பவர் அது பற்றி பெரிதாக ஆர்வம் காட்டாவிட்டாலும், தொடர்ந்து உங்களை பற்றிய விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து, அவர்களின் கவனத்தை, அன்பை, அக்கறையை உங்கள் பக்கம் ஈர்க்க நிவைப்பீர்கள்.

2. உங்களின் மகிழ்ச்சி அல்லது நலன்களை விலையாக கொடுத்தாவது மற்றவர்களை மகிழ்ச்சியாக, அன்பாக பார்த்துக் கொள்ள நினைப்பீர்கள். இது நீங்கள் தனிமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மற்றவர்களின் அன்பை பெற விரும்புவதாலும் அப்படி நடந்த கொள்ளலாம்.

3. அதிகளானவர்கள் இருக்கும் கூட்டங்களில் நீங்கள் தவறாக உணரப்படுவீர்களோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றினால் நீங்கள் தனிமையால் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

4. நீங்கள் பிரியமானவராக நினைக்கும் நபர்களுடன் நீங்கள் மட்டுமே நெருக்கமாக, முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என நினைப்பீர்கள். மற்றவர்கள் அவர்களுடன் பேசுவது உங்களுக்கு பொறாமை எண்ணத்தை ஏற்படுத்தினால் நீங்கள் அதிகமாக தனிமையை உணர்கிறீர்கள் என்று அர்த்தம்.

5. தனிமையால் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், மற்றவர்கள் தங்களை விட்டு போய் விடுவார்களோ என்ற பயத்துடனேயே எப்போதும் இருப்பார்கள்.

6. உச்சபட்ச தனிமையை உணரும் போது, மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். மற்றவர்களின் அன்பும், அக்கறையும், கவனமும் தங்கள் மீது மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

7. தனிமையை அதிகமாக உணரும் நபர்கள் தங்கள் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மையோடு இருப்பார்கள். அதே போல் எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி மிக அதிகமாக சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

8. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க எப்போதும் அதிகமாக ஏதாவது நகைச்சுவையாக பேசிக் கொண்டே இருப்பார்கள். நகைச்சுவை உணர்வை அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தனிமையால் மிகவம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

9. சாப்பிடுவது, வேலை செய்வது என அனைத்தையும் கண்டிப்பாக செய்து ஆக வேண்டுமே என எண்ணத்துடன் அனைத்தையும் விருப்பமின்றி, கட்டாயத்தின் பேரில் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தனிமையால் மிகவும் பாதிக்கப்படைந்துள்ளீர்கள் என்று அர்த்தம்.