நடிகை ரம்யா பாண்டியன் ஒரு வீடியோவில் கல் உப்பை வைட்டமின் டி-க்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இது விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில் இது உண்மையா என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

வைட்டமின் டி பற்றி ரம்யா பாண்டியன் கூறிய கருத்துக்கள்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தற்போது ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சித்த மருத்துவர் ஒருவர் தனக்கு வைட்டமின் டி கிடைப்பதற்கு எளிய வழியை கூறியதாக தெரிவித்திருந்தார். அதாவது கல் உப்பை வாங்கி அதை வெயிலில் இரண்டு மூன்று நாட்கள் வைத்து எடுத்தால் வைட்டமின் டி-யை அந்த கல் உப்பு உள்வாங்கிக் கொள்ளும் என்றும், அந்த உப்பை சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும் என்றும், இந்த முறை மூலம் எளிமையாக வைட்டமின் டி நமக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலான நிலையில் இதை மருத்துவர்கள் முழுமையாக மறுத்து வருகின்றனர்.

கல் உப்பு வைட்டமின் டி குறைபாட்டை போக்காது

வைட்டமின் டி என்பது நம் எலும்புகள், தசைகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. இது உடலின் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளைச் சீராக்க உதவுகிறது. கல் உப்பு, இமாலயன் பிங்க் சால்ட் அல்லது இந்துப்பு என்று அழைக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைடுடன் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் சிறிய அளவில் உள்ளன. இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க உதவும். இருப்பினும், கல் உப்பு வைட்டமின் டி குறைபாட்டை நேரடியாகப் போக்காது. கல் உப்பில் வைட்டமின் டி இல்லை. வைட்டமின் டி குறைபாட்டிற்குத் தீர்வு காண்பதற்கு, சில குறிப்பிட்ட வழிகளே உள்ளன.

View post on Instagram

வைட்டமின் டி குறைபாட்டைப் போக்கும் வழிகள்

வைட்டமின் டி-யின் முதன்மை மற்றும் சிறந்த ஆதாரம் சூரிய ஒளிதான். நமது சருமம் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கிறது. தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் சுமார் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது. சில உணவுகளில் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ளது. சால்மன், சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை சாப்பிடுவது உடலில் வைட்டமின் டி-யை உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் முட்டையின் மஞ்சள் கரு, பால், தயிர் போன்ற வைட்டமின் டி சேர்க்கப்பட்ட பொருட்கள் (fortified foods) வைட்டமின் டி யை அதிகரிக்க உதவுகின்றன. கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி வைட்டமின் டி சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.

இது ஒரு தவறான வழிகாட்டுதல்

கல் உப்பு உடலுக்குப் பல நன்மைகளைத் தரக்கூடும். ஆனால், அது வைட்டமின் டி குறைபாட்டைப் போக்க உதவாது. வைட்டமின் டி-க்குச் சூரிய ஒளி, சரியான உணவு, மற்றும் தேவைப்பட்டால் சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதே சரியான வழி. ஆனால் ரம்யா பாண்டியன் சொல்வது போல கல் உப்பை வெயிலில் வைத்து எடுத்து சாப்பிட்டால் அதன் மூலமாக வைட்டமின் டி கிடைக்கும் என்பது தவறான வழிகாட்டுதல் ஆகும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. எனவே வைட்டமின் டி-யை பெற இந்த முறை உதவாது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.