கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஆபத்தானது? அதன் அறிகுறிகள் என்ன? பெண்களே கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..
கர்ப்பைப்பை வாய் புற்று நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை முறை ஆகியவை குறித்து பார்க்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக நடிகை பூனம் பாண்டே உய்ரிழந்துவிட்டதாக நேற்று வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தான் இறக்கவில்லை என்றும் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே மரணத்தை போலியாக அறிவித்தாகவும் அவர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனினும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிக இறப்பு விகிதம் கொண்ட நோய் என்பதால் அது ஆபத்தான நோயாகவே கருதப்படுகிறது. இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவதில் உள்ள சிக்கல்களே இந்தியாவில் அதிக இறப்பு விகிதத்திற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். எனவே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றியும் அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கர்ப்பைப்பை வாய் புற்று நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை முறை ஆகியவை குறித்து பார்க்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், HPV என்றால் என்ன?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் உள்ள செல்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும், மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகும். உடலுறவின் போது வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும் என்றும், இது எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் HPV தொற்று உள்ள ஒருவருடன் உடலுறவு கொண்ட பிறகு அறிகுறிகள் உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். இது ஒருவருக்கு எப்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவது கடினம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய்க்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு.
மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு அல்லது வழக்கத்தை விட பல நாட்கள் நீடிப்பது
பிறப்புறுப்பில் இருந்து திரவம் அல்லது ரத்தம் வெளியேறுவது.
உடலுறவின் போது இடுப்பு வலி அல்லது வலி.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள்
புகைப்பிடிப்பது
பல நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது
சிறுவயதிலேயே உடலுறவு கொள்வது
பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு
ஹெர்பெஸ், கிளமிடியா, கோனோரியா, சிபிலிஸ் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் HPV ஆபத்தை அதிகரிக்கலாம்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், மருத்துவர் அல்லது பிற உடல்நலப் பாதுகாப்பு நிபுணரை உடனே சந்திக்க வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சோதனை
உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்தால், உங்கள் கருப்பை வாயின் முழுமையான பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. பஞ்ச் பயாப்ஸி, எண்டோசர்விகல் க்யூரெட்டேஜ், எலக்ட்ரிக்கல் வயர் லூப், கோன் பயாப்ஸி போன்றவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் சில சோதனைகள் ஆகும். உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், புற்றுநோயின் அளவைக் கண்டறிய உங்களுக்கு மற்ற சோதனைகள் தேவைப்படலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சையானது புற்றுநோயின் நிலை மற்றும் பல்வேறு காரணிகளைப் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இந்தியாவில் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இது நடுத்தர வயதுப் பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக 35 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் 1,23,907 கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் பதிவான நிலையில் 77,348 பெண்கள் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர் பதிவாகியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. உண்மையில், லான்செட் ஆய்வின்படி, ஆசியாவிலேயே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அதிக பாதிப்பு இந்தியாவில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.
இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இன்னும் கலாச்சார களங்கத்திற்கு உட்பட்டது என்பதால் பெரும்பாலான பெண்கள் அதனை சோதனை செய்யவே தவிர்க்க விரும்புகின்றனர் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சோதனை மற்றும் சிகிச்சைக்கு போதுமான அணுகல் இல்லாத கிராமப்புறங்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். போதிய சுகாதார உள்கட்டமைப்பு, கலாச்சார தடைகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் உள்ள சிரமங்களுக்கு பங்களிக்கின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.