Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: இந்தியாவில் HPV தடுப்பூசிகளின் விலை என்ன? எந்த வயதில் தடுப்பூசி போட வேண்டும்?

இந்தியாவில், HPV வைரஸுடன் தொடர்புடைய கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பல தடுப்பூசிகள் உள்ளன.

Poonam Pandey Cervical Cancer:  HPV vaccines available, cost and age groups check details here Rya
Author
First Published Feb 3, 2024, 1:52 PM IST

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் உள்ள செல்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும், மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகும். உடலுறவின் போது வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும் என்றும்,

இது எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் HPV தொற்று உள்ள ஒருவருடன் உடலுறவு கொண்ட பிறகு அறிகுறிகள் உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். இது ஒருவருக்கு எப்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவது கடினம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஆபத்தானது? அதன் அறிகுறிகள் என்ன? பெண்களே கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..

ஆனால் இந்தியாவில், HPV வைரஸுடன் தொடர்புடைய கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பல தடுப்பூசிகள் உள்ளன. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் 'டாக்டர் க்யூட்ரஸ்' என்று அழைக்கப்படும் டாக்டர் தனயா நரேந்திரன், HPV தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி பேசி உள்ளார். இதுகுறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் "90% க்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் HPV வைரஸ் காரணமாக ஏற்படுகின்றன., மேலும் 2006 ஆம் ஆண்டு முதல் HPV க்கு எதிரான தடுப்பூசியை நாம் பெற்றுள்ளோம். இந்த தடுப்பூசி இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.” என்று தெரிவித்தார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகள், செலவுகள் மற்றும் வயதுக் குழுக்கள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதில் மிகவும் நன்கு அறியப்பட்ட தடுப்பூசி கார்டசில் 9 ( Gardasil 9) ஆகும், இது HPV தொடர்பான பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணமான ஒன்பது வகையான வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தடுப்பூசி 9 முதல் 45 வயது வரையிலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு டோஸ் கார்டசில் 9 தடுப்பூசியின் விலை ரூ.10,850 ஆகும். 

மற்றொரு தடுப்பூசி, கார்டசில் (Gardasil). இந்த தடுப்பூசி , HPV 6, 11, 16, மற்றும் 18 ஆகிய மாறுபாடுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் உரிமம் கிடைத்தது. ஒரு டோஸ் கார்டிசல் தடுப்பூசி ரூ.2,000 முதல் ரூ.4,000 என்ற விலை கிடைக்கிறது.

செர்வாவாக் (Cervavac) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் HPV தடுப்பூசி ஆகும். இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மூலம். 9 மற்றும் 26 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசியை போட அனுமதி பெற்றுள்ளது. மற்ற தடுப்பூசிகளை விட செர்வாவேக் தடுப்பூசி ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் உள்ளது, 2 டோஸ் செர்வாவேக் தடுப்பூசியின் விலை ரூ.4,000 ஆகும். இது ஒரு டோஸ் ரூ.2,000 ஆக உள்ளது. இந்த தடுப்பூசி HPV தொற்று, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதில் அதிக செயல்திறனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்..” நேற்று இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே..

இந்தியாவில் HPV தடுப்பூசி

கர்ப்பப்பை வாய் தடுப்பூசிகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப், சிக்கிம், கர்நாடகா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு இலவச HPV தடுப்பூசி திட்டங்களை அறிவித்துள்ளன. மேலும், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தில் HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது, 

HPV தடுப்பூசிகள் 9 வயது முதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையின் போது, 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசி போடுவதை அரசாங்கம் ஊக்குவிப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios