Asianet News TamilAsianet News Tamil

Bournvita: 'போர்ன்விட்டா' மீது விழுந்த குற்றச்சாட்டு.. குழந்தைகள் நல அமைப்பு முக்கிய அறிவிப்பு..

போர்ன்விட்டாவில் சர்க்கரை அதிகம் கலந்திருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி பரவிய நிலையில், தவறான விளம்பரங்களை அகற்ற குழந்தை உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

NCPCR Notice to Bournvita
Author
First Published Apr 27, 2023, 12:29 PM IST

குழந்தைகளுக்கு பாலில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்ற ஊட்டச்சத்து பொடிகள் கலந்து கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கிடையில், நாடு முழுவதும் பல கோடி பேர் எடுத்து கொள்ளும் போர்ன்விட்டாவில் (BournVita) தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாய் பரவிய நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நேற்று மாண்டலிஸ் இந்தியா நிர்வாகத்திற்கு (Mondelez India International) கடிதம் எழுதியுள்ளது. 

'குழந்தைகள் சாப்பிடும் போர்ன்விட்டாவில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும்' என்ற புகாரை அடுத்து, பால் சப்ளிமெண்ட் தொடர்புடைய எல்லா தவறான விளம்பரங்களையும், பேக்கேஜிங், லேபிள்களையும் கூட மதிப்பீடு செய்து திரும்பப் பெற வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. போர்ன்விட்டா (BournVita) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நோட்டீஸில், 'போர்ன்விட்டா' தயாரிப்பு குறித்த விரிவான தகவல்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ரெவன்ட் ஹமாட்சிங்கா என்பவர் போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை உள்ளதாகவும், குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சர்க்கரை அளவை விட அது அதிகம் என்றும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது பதிவிட்ட கொஞ்ச நேரத்தில் வைரலாகிவிட்டது. இதையடுத்து, மாண்டலிஸ் இந்தியா நிறுவனம் ரெவன்ட் ஹமாட்சிங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ரெவன்ட் ஹமாட்சிங்கா பின்வாங்கினார். தான் பதிவிட்ட வீடியோவையும் நீக்கிவிட்டார். ஆனால் மக்களிடையே இந்த தகவல் வேகமாக பரவியது. 

bournvita போர்ன்விட்டா

இதையும் படிங்க: தினமும் ஒரு வெள்ளரி இவ்வளவு நன்மைகளா! ஆனா வெள்ளரிகாய் சாப்பிடும்போது இதை மட்டும் சாப்பிடாதீங்க!

மாண்டலிஸின் தயாரிப்பான போர்ன்விட்டாவில், சர்க்கரை மற்றும் கோகோ திடப்பொருள்கள், புற்றுநோயை உண்டாக்கும் செயற்கை நிறமூட்டிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் தான் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகளின்படி போர்ன்விட்டா தயாரிப்பில் உள்ள பொருட்களின் விவரங்களைக் காட்டத் தவறிவிட்டதாக குழந்தை உரிமை ஆணையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது கடிதத்திற்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் மாண்டலிஸிடம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக கடந்தவாரம் மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில்,"போர்ன்விட்டாவின் தயாரிப்பு தரமானது. எல்லா தரச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, முறையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போர்ன்விட்டாவில் உள்ள உட்பொருள்கள் எல்லாம் தர சான்றிதழ் பெற்றிருப்பவை. அதில் வெளிப்படை தன்மை உள்ளது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் வெளியான வீடியோ மக்களிடம் நாங்கள் பெற்றிருந்த நம்பிக்கையை குறைத்துள்ளது. தவறான தகவல்களை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது? அதனால் என்னாகும் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios