Weight Loss Tips : மூன்று மாதங்களில் 18 கிலோ வரை எடையை குறைத்த பெண் ஒருவரின் எடை குறைப்பு பயணம் குறித்து இங்கு காணலாம்.
உடல் பருமன் ஆரோக்கியமான விஷயம் அல்ல. இது உடல்நல கோளாறுகளுக்கு காரணமாகிவிடும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். எடையைக் குறைக்க உணவுப் பழக்கங்களை மாற்றுவது, கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது என மெனக்கெடுக்கிறார்கள். ஆனாலும் சிலருக்கு எடை குறைவதே இல்லை. இதற்கு சில கெட்டப்பழக்கங்கள் காரணமாக இருக்கலாம். இந்தப் பதிவில் வெறும் மூன்று மாதங்களில் 18 கிலோ வரை எடையை குறைத்த பெண் ஒருவரின் எடை குறைப்பு பயணத்தைக் குறித்து அறிந்து கொள்வோம்.
இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி டிப்ஸைகளை வாரி வழங்கும் உடற்பயிற்சி நிபுணர் ரீத் கவுர் எடை குறைப்பு பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில் ஒரே ஒரு பழக்கம் கிட்டத்தட்ட 12 வாரங்களில் 18 கிலோ எடையைக் குறைக்க உதவியதாக கூறியுள்ளார். சீக்கிரமே எடை குறைக்க நினைத்தால் கலோரி பற்றாக்குறையில் தான் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இதனை கலோரிகளில் தான் கணக்கிடுவார்கள். நாம் சாப்பிடுவதைவிட அதிக கலோரிகளை எரித்தால் அப்போது எடை குறையும்.
அதிக பசியுடன் இருந்தால், கலோரி பற்றாக்குறையை கடைபிடிப்பது கடினம். ஆனால் அளவோடு சாப்பிடலாம். குறைவான கலோரிகளில் அதிக உணவை சாப்பிடுவது தான் எடை குறைக்க சீக்ரெட். இந்த முறையில் நீங்கள் நிறைய சாப்பிடுவீர்கள். ஆனால் எடை அதிகரிக்காது. அதை எப்படி செய்வது? ரீத் உணவுமுறை மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார்.
அதிகமான கலோரி கொண்ட கார்போஹைட்ரேட் உணவுகளுக்குப் பதில், பழங்கள், காய்கறிகள், சூப்கள் ஆகிய அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுங்கள். பருப்பு வகைகள், முழுதானியங்கள் உண்ணலாம். இந்த உணவுகள் செரிமானத்திற்கு உதவும். குறைவாக சாப்பிடும்போதே வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். கீரைகள், சாலடுகள், புரதம் இருக்கும் உணவுகளை உண்ணலாம். இது கலோரி பற்றாக்குறை டயட்டை பராமரிக்கவும் உதவும்.
இந்த மாதிரி உணவுப் பழக்கத்தைப் பின்பற்றிய பின்னர் ரீத், உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளார். எடை குறைக்க நினைத்தால் உணவுப்பழக்கத்தில் இந்த மாற்றத்தை செய்யுங்கள். சரியான உணவுமுறையும், மிதமான உடற்பயிற்சியும் எடை குறைக்க உதவும். அதிக கலோரி உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை உணவுகள், பேக்கரி உணவுகளை தவிருங்கள். எடையை குறைக்க நினைத்தால் இவற்றை மாதத்திற்கு ஒருமுறை ஆசைக்கு உண்ணலாமே தவிர, தினமும் அல்லது அடிக்கடி உண்ணக் கூடாது.
