குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான பேஷன் புரூட்: எப்படி உண்ணலாம்?
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இந்த மழைப் பருவத்தில், ஸ்நாக்ஸ் டைமிற்கு தினசரி ஒரு பழத்தை கொடுத்துப் பழக்கி விடுவது மிகவும் நல்லது.
மழைக்காலம் தொடங்கியவுடன் சளி மற்றும் காய்ச்சல் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. பொதுவாக பழங்களை அதிகளவில் உண்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கும். எதிர்ப்பு சக்தி இருக்கையில், சளி மற்றும் காய்ச்சல் அவ்வளவு எளிதில் நெருங்காது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இந்த மழைப் பருவத்தில், ஸ்நாக்ஸ் டைமிற்கு தினசரி ஒரு பழத்தை கொடுத்துப் பழக்கி விடுவது மிகவும் நல்லது.
குழந்தைகளை கவரும் பழங்கள்
பலவிதமான பழங்களை விரும்பும் குழந்தைகளுக்கு பேஷன் புரூட் மிகவும் பிடிக்கும். இதற்கு மிக முக்கிய காரணம், அதன் உள்ளே ஜெல்லி போன்று இருக்கும் சதைப்பகுதி தான். மேலும், அதன் கொட்டையும் மொறு மொறு என இருக்கும். அதன் சுவையோ இனிப்பு மற்றும் புளிப்பு கலந்து குழந்தைகளை மிகவும் கவரும். இந்தப் பழம் ஒரு பழமையான ஒரு வகை, தமிழில் இப்பழத்தை கொடித்தோடை என்று அழைப்பது வழக்கம். இந்தப் பழம் இந்தியா மற்றும் பிரேசிலை தாயகமாகக் கொண்டுள்ளது. மேலும் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் வயநாடு போன்ற மலைப்பிரதேசப் பகுதிகளில் அதிகமாக இப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
பேஷன் பழம் மஞ்சள், ஊதா, சிவப்பு மற்றும் பிங்க் என பல நிறங்களில் கிடைக்கிறது. அந்தந்த மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து பழங்களின் நிறம் அமைகிறது. கொடிகளில் விளையும் இப்பழத்தின் நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.
வைட்டமின் சி
பேஷன் பழத்தில் ஆரஞ்சு பழம் போல் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ரத்த நாளங்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இப்பழத்தை அடிக்கடி கொடுக்கலாம். மேலும், இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், சளி வராமலும் பாதுகாக்கும். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
வைட்டமின் ஏ
பேஷன் பழத்தின் கூழ் மற்றும் விதைகளில் தினசரி உங்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ 8% நிறைந்துள்ளது. இது, ஆரோக்கியமான கண்கள் மற்றும் செல்கள், இனப்பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
Spice Tea: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மசாலா தேநீர்: எப்படி செய்வது? எப்போது குடிக்கலாம்?
நார்ச்சத்து
பேஷன் பழத்தில் நார்ச்சத்தும் அதிகளவு நிரம்பியுள்ளது. இது, உங்கள் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இப்பழத்தை உண்ணும் போது, பசி உணர்வு குறையும். கொலஸ்ட்ரால், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
ஊட்டச்சத்துக்கள்
பேஷன் பழம் உடலுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கிறது. இந்த சத்துக்கள் சிறுநீரகங்கள், நரம்புகள், தசைகள் மற்றும் இதயம் என அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது.
சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள காபி பேஸ்பேக்கை ட்ரை பன்னுங்க!
எப்படி உண்ணலாம்
பேஷன் பழத்தை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். இருப்பினும் புரூட் மிக்ஸ் காக்டெயில் ஜூஸ் மற்றும் தயிர் கலந்த ஸ்மூத்தி என இதைக் கொண்டு உங்களுக்கு பிடித்த ஒரு பானத்தை தயார் செய்தும் குடிக்கலாம். இப்படி ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி என மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அது மட்டுமல்ல ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்றவற்றிலும் இதனை சேர்த்து அதன் சுவையைக் கூட்டலாம்.