நம் நாட்டில் பலரும் சப்பாத்திக்கு மாவு பிசைந்து அதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் நேரத்தில் சப்பாத்தியாக்கி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தி மாவை ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறுமா?
கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை தவிர்த்து விட்டு சப்பாத்தி போன்ற நார்ச்சத்து கலந்த உணவுகளை சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் உடனடியாக மாவு பிசைந்து சப்பாத்தி சுடுவதற்கு பலரும் சோம்பேறித்தனம் படுகின்றனர். இதன் காரணமாக மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடும் வழக்கத்தை இந்திய வீடுகளில் பல குடும்பத் தலைவிகள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஃப்ரிட்ஜில் மாவு வைத்து பயன்படுத்துவது என்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஃப்ரிட்ஜில் சப்பாத்தி மாவை வைத்தால் விஷமாக மாறுமா? எவ்வளவு நேரம் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்? எப்படி சேமிக்க வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தி மாவில் ஏற்படும் மாற்றங்கள்
ஃபிரிட்ஜின் குளிர்ந்த வெப்பநிலையானது (பொதுவாக 0 முதல் 4 டிகிரி செல்சியஸ்) மாவில் பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ச்சியை மெதுவாக்குகிறது. இதனால் மாவு அறை வெப்ப நிலையில் வைப்பதை விட ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் புதியதாக இருக்கும். சரியாக சேமித்தால் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாவை பயன்படுத்தலாம். அதே சமயம் நீண்ட காலம் ஃபிரிட்ஜில் மாவை வைத்தால் அது பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். மாவு குளிர்ச்சியாக மாறும் பொழுது அதன் அமைப்பு சற்று மாறலாம். உதாரணமாக மாவு சற்று இறுக்கமாகவோ அல்லது ஈரப்பதத்தை இழந்ததாகவோ உணரலாம். இது சப்பாத்தியின் மென்மையையும் பாதிக்கலாம். நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் பொழுது மாவு காற்று மற்றும் ஈரப்பதத்தால் புளித்து வாசனை மாற வாய்ப்புள்ளது. இது சுவையை பாதிக்கும். அதே சமயம் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
மூன்று நாட்களுக்கு மேல் சேமிக்கக்கூடாது
மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்கப்படுவதால் மாவில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதை நீண்ட நேரம் அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் பொழுது இயற்கையான கிளர்ச்சி ஏற்படலாம். இதனால் மாவு புளித்து ஒரு வித்தியாசமான வாசனை வெளிப்படும். இந்த புளித்த மாவை சாப்பிடுபவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி, வயிறு கோளாறுகள், புளித்த ஏப்பம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். சில சமயங்களில் நீண்ட நாட்களாக சேமிக்கப்படும் சப்பாத்தி மாவு விஷமாக மாறும் என்று கூறப்படுகிறது. இது அரிதானது என்றாலும் சில சூழ்நிலைகளில் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். சப்பாத்திக்காக பிசைந்து நீண்ட நாட்களாக ஃபிரிட்ஜில் சேமிக்கப்படும் மாவு விஷமாக மாறுகிறதா இல்லையா என்பதை கீழே உள்ள காரணிகள் தீர்மானிக்கின்றன.
மாவை விஷமாக்கும் காரணிகள்
மாவு சுத்தமாக பிசையப்படாமல் அல்லது அழுக்கான பாத்திரத்தில் சேமிக்கப்பட்டால் சால்மனல்லா, ஈகோலி போன்ற பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இது விஷத்தன்மையை ஏற்படுத்தலாம். ஃப்ரிட்ஜில் மாவு சரியாக மூடி வைக்கப்படாவிட்டால், மற்ற உணவுப் பொருட்களில் இருந்து மாவுக்கு கிருமிகள் பரவும் வாய்ப்பு உண்டு. மாவு நீண்ட நேரம் ஃபிரிட்ஜில் இருக்கும் பொழுது ஈரப்பதம் மற்றும் பிற காரணங்களால் பூஞ்சைகள் உருவாகும். இதன் காரணமாக பச்சை அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றலாம். பூஞ்சை உள்ள மாவு விஷமாக இருக்கலாம். இவை சாப்பிடுவதற்கு பாதுகாப்பற்றது. மாவு ஆரம்பத்திலேயே தரமற்றதாக இருந்தால் அதை ஃபிரிட்ஜில் வைத்தாலும் விரைவில் கெட்டுவிடும். பயன்படுத்தப்பட்ட தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டால் மாவு விரைவில் பாதிக்கப்படலாம்.
1-2 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்
புதிதாக பிசைந்த மாவு ஃபிரிட்ஜில் அதிகபட்சம் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த நேரத்தில் சுவையும் தரமும் பாதிக்கப்படாது. இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் மாவை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் பொழுது அது புளிக்க ஆரம்பிக்கலாம். இது சாப்பிடுவதற்கு பாதுகாப்பற்றதாக இல்லாவிட்டாலும் சுவையும், மனமும் மாறிவிடும். மூன்று நாட்களுக்கு மேல் வைத்த மாவை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், மாவை நன்கு பரிசோதிக்க வேண்டும். புளிப்பு வாசனை, நிறமாற்றம், பூஞ்சைகள், கருப்பு புள்ளிகள் இருந்தால் மாவை தூக்கி எறிய வேண்டும். மாவு விஷமாகாமல் இருப்பதற்கு சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சுத்தமான கைகள், சுத்தமான பாத்திரம் மற்றும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
மாவு விஷமாகாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் பொழுது காற்று புகாத பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் முடியால் மூடி வைக்க வேண்டும். இது ஈரப்பதம் மற்றும் காற்று வெளிபாட்டை குறைக்கும். மாவு பிசையும் பொழுது தேவையான அளவு தண்ணீர் மட்டுமே சேர்க்கவும். அதிக ஈரப்பதம் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். ஃபிரிட்ஜில் இருந்து மாவை எடுத்த பிறகு அதை முதலில் மணந்து, பார்த்து, தொட்டு பரிசோதிக்கவும். பிசுபிசுப்பு, வாசனை அல்லது நிறமாற்றம் இருந்தால் பயன்படுத்தக் கூடாது. இரண்டு நாட்களுக்கு மேல் சேமிப்பதாக இருந்தால் ஃப்ரீஸரில் வைக்கலாம். ஃப்ரீஸரில் வைப்பதற்கு முன்னர் சிறு உருண்டைகளாக உருட்டி காற்று புகாத பைகளில் வைத்து ஃப்ரீஸ் செய்யலாம். மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்ப நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் பிசைந்து பயன்படுத்தினால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
புதிதாக பிசைந்து பயன்படுத்துவது நல்லது
சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்து சரியாக சேமித்தால் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நீண்ட நாட்கள் (மூன்று நாட்களுக்கு மேல்) வைத்திருந்தால் அது புளித்து சுவை குறையலாம். அதில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே எப்போதும் மாவு புதிதாக பிசைந்து பயன்படுத்துவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைக்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள்.
