புதிய வகை கொரோனா மிகவும் கொடியதா? கர்நாடகா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏன்? ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்!!
புதிய வகை கொரோனா வைரஸான JN.1 பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடகா அரசு முதியவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸான JN.1 கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் போன்ற நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வயதில் இருப்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காற்றோட்டம் குறைவான மற்றும் மூடிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், இருமல், மூக்கில் ஒழுகுதல், சுவாசக் கோளாறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அனைத்து மாநிலங்களும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன் கிழமை அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். கேரளாவில் கோவிட் பரவல் மற்றும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று மடங்கு அளவிற்கு கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டிசம்பர் 1 முதல் 17ஆம் தேதி வரை இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலை மாநில அரசு வழங்கிய தகவலின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதிய JN.1 மாறுபாடு அலர்ட் : மாநிலங்கள் இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்.. மத்திய அரசு அட்வைஸ்..
இந்த நிலையில், JN.1 வகை தொற்று குறித்து மேலும் அறிய, பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் உள் மருத்துவத்திற்கான ஆலோசகர் டாக்டர் பசவராஜ் குந்தோஜியை ஏசியாநெட் நியூஸ் தொடர்புகொண்டது.
கொரோனா 19 புதிய வகை கொரோனாவாக உருவெடுத்துள்ளதா?
ஆமாம். கடந்த 10-15 நாட்களில் புதிய வகை கொரோனா 19 பாசிடிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த ஆண் ஒருவருக்கு ஐசியு கேர் தேவைப்பட்டது. இவருக்கு 70-80% ஆக்சிஜன் வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் நல்ல பலன் அளித்துள்ளது. மற்றொருவர் மருத்துவர். அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா கவலை அளிக்கக் கூடியதா?
ஆமாம். குறிப்பாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். சிகிச்சை அனுபவம் கிடைத்து வந்தாலும், பாதிக்கப்படக்கூடிய குழுவிற்கு முன்னெச்சரிக்கைகள் முக்கியம்.
இது எந்த வகையில் முந்தைய கொரோனா வகையில் இருந்து வேறுபடுகிறது?
தற்போது சொல்வது இயலாது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பல்வேறு நோய்கள் உள்ள வயதான நோயாளிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடுமையான கோவிட் அல்லது நீண்ட நாட்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு அறிவுரை எதுவும் இருக்கிறதா?
முந்தைய கோவிட்-19 நோய் தொற்றுகளிலிருந்து தனிநபர்கள் முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தால், பொதுவாக அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நிலையான முன்னெச்சரிக்கைகள் பின்பற்ற வேண்டும்.
குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பான ஆலோசனை வழங்க முடியுமா?
கோவிட்-19 லேசான அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளும் பெரியவர்களும் சில நாட்களில் குணமடைகின்றனர். வயதானவர்களுக்கு கடுமையான தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு? பொது சுகாதாரத்துறை கூறுவது என்ன?
கோவிட்-19 அறிகுறிகளுக்கான ஆரம்ப சிகிச்சை அணுகுமுறை என்ன?
யாராவது காய்ச்சல், இருமல், மூக்கில் ஒழுகுதல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தினால், அது காய்ச்சல் அல்லது கோவிட்-19 ஆக இருக்கலாம். காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கையாக பாராசிட்டமல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தொடர்ந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். பீதி அடைய வேண்டாம், ஏனெனில் வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் காய்ச்சல் தணிந்த பிறகு, சுவாசிப்பதில் சிரமம், இருமல், சோர்வு மற்றும் 94% க்கும் குறைவான ஆக்ஸிஜன் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.