தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அது உண்மையில் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்பது பலருக்கும் சந்தேகமே. சமீபத்திய நிபுணர் தகவல்களின்படி, தினமும் சுமார் 3 லிட்டர் நீர் குடிப்பது சில சூழ்நிலைகளில் உடலுக்கு நன்மை பயக்கும். வெப்பமான காலநிலையில் அல்லது அதிக உடல் உழைப்புக்குப் பிறகு அதிக நீர் குடிப்பது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளித்து, அழுத்தத்தைச் சமாளிக்க உதவுகிறது. இந்த அளவு நீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும், நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இருப்பினும், அனைவருக்கும் ஒரே அளவு நீர் தேவை என்று நினைப்பது தவறு. சிலருக்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ நீர் தேவைப்படலாம். உடல் எடை, வாழ்க்கை முறை, காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடும். உதாரணமாக, 70 கிலோ எடையுள்ள ஒருவருக்கு சுமார் 2.1 முதல் 2.5 லிட்டர் நீர் போதுமானது.
ஆனால், மிக அதிகமாக நீர் குடிப்பது ஹைபோநெட்ரீமியா என்ற நிலைக்கு வழிவகுக்கும். இதனால் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறையும். இது தலைவலி, வலிப்பு, கடுமையான நிலையில் கோமாவுக்கும் கூட வழிவகுக்கும். குறிப்பாக, முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், இதயம் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு எலக்ட்ரோலைட் கலந்த நீர் அருந்துவது, தாகத்தை உணர்ந்து நீர் அருந்துவது அவசியம். நீர் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்றாலும், தேவைக்கு அதிகமாக நீர் அருந்துவது பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

