கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் முன்பு அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

Covid 19 Prevention Tips : இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகின் பல நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கித் தவித்தன. தற்போது அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக மீண்டு வந்த நிலையில் அண்மையில் சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்தியாவில் சுமார் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நேற்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமல் எப்படி தற்காப்பது என இந்தப் பதிவில் காணலாம். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முக்கியமான தடுப்பு வழி என்றால் அது தடுப்பூசி தான். நாடு முழுவதும் ஏற்கனவே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இவை தவிர சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நம்மை தொற்றிலிருந்து காக்கும்.

பரவும் விதம்:

கொரோனா தொற்று என்பது சுவாச நோய்களை உண்டாக்கும் வைரஸ்களிடம் இருந்து பரவுகிறது. சளி, ஜலதோஷம் எப்படி காற்றில் பரவுமோ அதைப் போலவே கொரோனாவும் காற்றின் மூலம் பரவக் கூடியதுதான். தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திய துணி, பொருள்கள், தொடுதல், அவர்களின் அருகாமையில் முகக்கவசம் அணியாமல் இருப்பது போன்றவை தொற்று ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

அறிகுறிகள்:

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களுக்குப் பின் கொரோனாவின் அறிகுறிகள் தோன்ற தொடங்கும். சுவை, வாசனை இழப்பு, சுவாசித்தலில் சிரமம் ஏற்படலாம். சளி, வயிற்று வலி, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதில் சில அறிகுறிகள் மட்டும் தென்படலாம். சில நேரங்களில் எதுவுமே தென்படாமலும் நோய்த்தொற்று இருக்கலாம். மூச்சுவிடவே சிரமமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தடுக்கும் வழிகள்:

  • கட்டாயம் 6 மாதங்கள், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவது அவசியம்.
  • நோய் அறிகுறிகள் உள்ளவர்களுடன் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 20 வினாடிகள் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் இருக்கும் சானிடைசர் பயன்படுத்தலாம்.
  • கதவு கைப்பிடிகள் உள்ளிட்ட அடிக்கடி தொடும் பொருள்களின் மேற்பரப்புகளை சுத்தம் செய்வது அவசியம்.
  • கூட்டமான இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
  • பணம் போன்ற பலர் புழங்கும் பொருள்களை பயன்படுத்தும் போது சானிடைசர் பயன்படுத்த வேண்டும் அல்லது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • வீட்டை விட்டு வெளியேறிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்போது கட்டாயம் துணிகளை துவைத்து குளித்துவிடுங்கள்.