கோழி இறைச்சி என்பது பலரின் விருப்பமான உணவு. ஆனால் கோழி இறைச்சியில் குறிப்பிட்ட பாகங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த பாகங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தோல் மற்றும் கழுத்து
கோழியின் தோலில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிப்பதுடன், கொலஸ்ட்ரால் இரத்த அழுத்தம், இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும். தோலில் பாக்டீரியாக்கள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சரியாக சமைக்காவிட்டால் அது குடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். தோல் மிருதுவாக இருப்பதால் பலருக்கும் பிடிக்கும். ஆனால் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தோலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோழியின் கழுத்துப் பகுதியில் நிணநீர் சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை கோழிக்கு செலுத்தப்படும் மருந்து மற்றும் ஹார்மோன் கழிவுகளை சேமிக்க வைக்கும் இடமாக செயல்படுகின்றன. இதை சாப்பிடும் பொழுது அந்த கழிவுப்பொருட்கள் மனித உடலில் சேர்ந்து மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே கோழியின் கழுத்துப் பகுதியையும் சாப்பிடக்கூடாது.
குடல் மற்றும் நுரையீரல்
கோழியின் குடல் பகுதியில் செரிமானக் கழிவுகள் மற்றும் நோய் கிருமிகள் அதிகமாக இருக்கும். முறையாக சுத்தம் செய்யாத பட்சத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்சனைகள் ஏற்படலாம். கோழியின் குடல்களில் உள்ள பாக்டீரியாக்கள் மனித உடலுக்குள் சென்று ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இந்த பாக்டீரியாக்களை எவ்வளவு சுத்தம் செய்தாலும் முற்றிலும் நீக்குவது கடினம். எனவே கோழியின் குடல் பகுதிகளை அறவே சாப்பிடுதல் கூடாது. ஆட்டின் நுரையீரல் போல கோழியின் நுரையீரலை யாரும் சாப்பிடுவதில்லை. கோழியின் நுரையீரல்களில் பல நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம். இந்த பாகம் முழுமையாக சமைக்கப்படாத நிலையில், இந்த நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் பரவி பெரும் ஆபத்துகளை விளைவிக்கலாம். எனவே கோழி நுரையீரலை சாப்பிடுதல் கூடாது.
தலை மற்றும் கால்கள்
சிலர் கோழியின் தலைப்பகுதியை விரும்பி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சூப் போன்ற பொருட்களில் கோழி தலையை பயன்படுத்துகின்றனர். கோழி தலையில் மூளைப் பகுதி இருப்பதால் அதில் ஹெவி மெட்டல்ஸ் அல்லது நச்சுப் பொருட்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த நச்சுப் பொருட்கள் மனிதர்களின் உடலில் சேர்ந்தால் அதன் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். மேலும் கோழியின் தலையில் சுற்றுச்சூழலில் இருந்து உறிஞ்சப்படும் பூச்சிக்கொல்லிகள் இருக்கலாம். இது நீண்டகால ஆரோக்கிய பிரச்சனைக்கு வழி வகுக்கலாம். சிலர் கோழியின் கால்களை விரும்பி சாப்பிடுவார்கள். சரியான பக்குவத்தில் சமைக்காத கால்கள் பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும். கால்கள் தரையுடன் தொடர்பில் இருப்பதால் அவற்றின் பிளவுகளில் அழுக்குகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஒட்டிக்கொண்டிருக்கலாம். இவற்றை சாப்பிடும் பொழுது வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
கற்குடல் மற்றும் இறக்கைகள்
கற்குடல் என்பது கோழியின் வயிறாக செயல்படுகிறது. இது பெரும்பாலும் உணவை அரைக்க உதவும் சிறிய கற்கள் மற்றும் மண்களைக் கொண்டது. முழுமையாக சுத்தம் செய்யாமல் சமைத்து சாப்பிட்டால் அது தீங்கு விளைவிக்கலாம். இது கோழியின் சுவையானப் பகுதியாக இருந்தாலும் சமைப்பதற்கு முன்னர் சரியான முறையில் கழுவி அதன் பின்னரே சமைக்க வேண்டும். கோழியின் இறக்கை நுனிகளானது தோல் மற்றும் எலும்புகளை கொண்டுள்ளன. இவற்றில் பெருமளவு ஊட்டச்சத்து இல்லை. இது சுவைக்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது. ஆனால் அவற்றில் எந்தவிதமான புரதமும் இல்லை. இவை அதிகப்படியான கொழுப்பு மற்றும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கலாம். எனவே இவற்றையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
