போர்ன்விட்டாவில் இருக்கும் பிரச்சனை! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்..! இப்போ என்ன சொல்றாங்க தெரியுமா?
போர்ன்விட்டா பானத்தில் அதிகமான சர்க்கரை இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நிறுவனத்தில் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மாண்டலிஸ் இந்தியா' நிறுவனம் தான் போர்ன்விட்டா பானத்தை தயாரிக்கிறது. குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானம் 'போர்ன்விட்டா'. இதில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருக்கிறது என சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து வீடியோ வைரலானது. இந்த வீடியோவை ரெவன்ட் ஹமாட்சிங்கா என்ற நபர் பகிர்ந்தார்.
மக்களிடையே இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில், மாண்டலிஸ் இந்தியா நிறுவனம் ரெவன்ட் ஹமாட்சிங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ரெவன்ட் ஹமாட்சிங்கா பின்வாங்கினார். தான் பதிவிட்ட வீடியோவையும் நீக்கிவிட்டார். ஆனாலும் அதற்கு முன்னதாக பலர் அந்த வீடியோவை பார்த்துவிட்டதால், போர்ன்விட்டா தயாரிக்கும் நிறுவனம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது."70 வருடங்களாக போர்ன்விட்டா இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. எங்களுடைய தயாரிப்பு தரமானது. எல்லா தரச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, முறையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போர்ன்விட்டாவில் உள்ள உட்பொருள்கள் எல்லாம் தர சான்றிதழ் பெற்றிருப்பவை. அதில் வெளிப்படை தன்மை உள்ளது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் வெளியான வீடியோ மக்களிடம் நாங்கள் பெற்றிருந்த நம்பிக்கையை குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. தவறான தகவலால், எங்களுடைய நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்"என மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!
இந்த வீடியோவை வெளியிட்ட ஹிமாட்சிங்கா, தான் ஓர் ஊட்டச்சத்து நிபுணர், அறிவுரையாளர் என்பதாக காட்டியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை, புற்றுநோயை வரவைக்கும் பொருள்கள் உள்ளன என்று கிளப்பிவிட்டிருக்கிறார். தற்போது மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் ஹிமாட்சிங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, அவர் நிறுவனத்திடம் மன்னிப்பு கோருவதாகவும், எந்த நிறுவனத்துடைய நற்பெயருக்கும், புகழுக்கும் அவதூறு விளைவிப்பது தன் நோக்கம் இல்லை என்றும் பேசியுள்ளார். தன் மீது சட்ட நடவடிக்கை வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்படி விவகாரம் மக்களிடையே கவனம் ஈர்த்து வரும் நிலையில், பங்குச் சந்தை மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜீரோதா (Zerodha) நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் இணை நிறுவனரான நிதின் காமத் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இவர் பகிர்ந்த லிங்கில் சாக்லேட், சிப்ஸ் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள் ஒரு நாளைக்கு ,அதிகபட்சமாக எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பாக்கெட் மீது லேபிள் செய்து ஒட்ட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். பூமியில் உள்ள ஆரோக்கியமான உணவுகள் கூட அளவாக உட்கொள்ளும்போது மட்டுமே ஆரோக்கியமானவை என்றும் அவர் கூறினார். Bournvita அல்லது Cadbury என்று தனித்து பிராண்டின் பெயர் எதையும் குறிப்பிடாமல் இந்தக் கருத்தை அவர் கூறியுள்ளார். மக்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களைத் தேர்வு செய்ய உதவும் வகையில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய அளவுகளையும், அவற்றின் தினசரி தேவையின் அளவுகளையும் லேபிளாக ஒட்ட அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதையும் படிங்க: சுகப்பிரசவம் ஆனால் கூட சில பிரச்சனைகள் வரும் என்பது உண்மையா? அப்போ சிசேரியன் பண்ணா என்ன ஆகும்!!