காதல் துணையை கண்டடைய ஈர்ப்பு விதியை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவான விளக்கத்தைக் காணலாம்.
நம்முடைய எண்ணங்களும், உணர்வுகளும் ஒருமித்து உருவாக்கும் நம்பிக்கையே நாம் வாழும் எதார்த்த வாழ்க்கையை வடிவமைக்கிறது. இதை தான் ஈர்ப்பு விதியும் செய்கிறது. இந்த விதி உண்மையா என இன்னும் விவாதம் இருந்தாலும், நம் ஆழ்மனதில் விரும்பும் விஷயங்களைதான் வாழ்வில் ஈர்க்கிறோம்.
எண்ணம்போல் தான் வாழ்க்கை. ஆகவேதான் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கச் சொல்லி மனநல நிபுணர்கள் கூட அறிவுறுத்துகின்றனர். எதை விரும்புகிறோமோ, எதை நினைக்கிறோமோ, எதைக் கண்டு அஞ்சுகிறோமோ அதைத் தான் நாம் ஈர்க்கிறோம். இந்தப் பதிவில் காதல் விஷயத்தில் எப்படி ஈர்ப்பு விதியை பயன்படுத்தி புதிய உறவைத் தேடலாம் என்பதை காணலாம்.
மற்றவர்கள் உங்களை நேசிக்கவேண்டும் என நினைத்தால் உங்களிடம் சுய அன்பு இருக்க வேண்டும். உங்களைக் குறித்த சுய மதிப்பு மீது உயர்வான நம்பிக்கை இருக்க வேண்டும். உதாரணமாக, "எனக்கு எங்க லவ் செட் ஆக போகுது" எனச் சிந்திக்கக் கூடாது. கண்டிப்பாக நான் என் காதலை கண்டடைவேன் என்றுதான் நினைக்கவேண்டும்.
சுய மதிப்பீடு
எப்போது உங்களை நீங்கள் மதிக்கிறீர்களோ அப்போது உங்களுக்கு ஒரு தரத்தை உருவாக்குகிறீர்கள். அதுவே பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான மதிப்பீடாக இருக்கும். பிரபஞ்சம் அப்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கும். தாழ்வு மனப்பான்மை, பயம், பொறாமை போன்ற எதிர்மறை சிந்தனைகள் ஈர்ப்பு விதியை செயல்பட விடாது.
காதல் உறவை தேடுபவர்கள் தங்களைக் குறித்து நல்ல அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும். சுய அக்கறையுடன் தங்களை நன்கு பராமரித்தும் கொள்ள வேண்டும். நேர்மறையான குணங்கள் வெளிப்படும் செயல்களை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்கான துணையை ஈர்க்க முதல்படி.
காட்சிப்படுத்தல்
ஈர்ப்பு விதியில் காட்சிப்படுத்தல் தான் முக்கியமான பகுதி. நீங்கள் எந்த மாதிரி உறவில் இருக்க விரும்புகிறீகளோ அதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். அன்பான, அரவணைப்பான உறவில் இருப்பது போல கற்பனை செய்யுங்கள். அப்படி கற்பனை செய்ய தினமும் தனி நேரம் ஒதுக்குங்கள். உங்களுடைய துணையின் குணங்கள், அவர்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனுபவங்களை கற்பனை செய்யுங்கள். அந்த சந்தோஷத்தை, மனநிறைவை உணருங்கள். இதை தினமும் செய்வதால் உங்கள் துணையை ஈர்க்கத் தொடங்குவீர்கள்.
நன்றியுணர்வு
நீங்கள் எதற்கு நன்றியுணர்வாக இருக்கிறீர்களோ அதை ஈர்ப்பீர்கள். சிறந்த நண்பர்கள், நல்ல குடும்பம் அல்லது சுய அன்பு என உங்களுக்கு கிடைத்த அன்பிற்கு நன்றி கூறுங்கள். இதன்மூலம் மறைமுகமாக பிரபஞ்சத்திற்கு இன்னும் அதிக அன்பை ஈர்க்கும் சிக்னலை அனுப்புகிறீர்கள். இதுவும் காதல் துணையை பெற்றுத் தரும்.
உறுதிமொழிகள்
தினமும் நேர்மறையான சில விஷயங்களை சொல்வதால் உங்கள் துணையை ஈர்ப்பீர்கள். "நான் பேரன்பான உறவுக்கு தகுதியானர் நபர்" அல்லது "ஆரோக்கியமான, அன்பான துணையை நான் ஈர்க்கிறேன்" ஆகிய உறுதிமொழிகளை சொல்லுங்கள். ஈர்ப்பு விதிக்கு மனநிலைதான் அடிப்படை. ஆனால் சரியான நடவடிக்கைகள் மூலம் தான் அடைய முடியும். வெறும் உறுதிமொழி உறவுகளை ஈர்க்காது. உங்கள் துணையை ஈர்க்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்ய நினைப்பவர்கள் மேட்ரிமோனியில் பதிவு செய்யலாம். காதல் திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொதுநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு சார் அம்சங்களில் கவனம் செலுத்தி மற்றவர்களுடன் பழகத் தொடங்கலாம். மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நீங்கள் கண்டிப்பாக உங்களை துணையை ஈர்ப்பீர்கள். நேர்மறையான எண்ணங்கள், கற்பனை, உறுதிமொழி மூன்றும் சேரும்போது கண்டிப்பாக ஈர்ப்புவிதி செயல்படும். ஏனென்றால் நீங்கள் ஆழமாக விரும்புவதை பிரபஞ்சம் நிறைவேற்றித் தரும்.
