அழுது கொண்டிருந்த பேரக்குழந்தையைத் தேற்ற மாமியார் தாய்ப்பாலூட்டியதைக் கண்டு மருமகள் ஆத்திரம்.
பொதுவாக குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் எல்லா தாய்க்கும் தனி பிணைப்பு உண்டு. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள உறவை உணர்வுரீதியாகப் பிணைக்கும். இந்த உறவில் யாரேனும் பங்குபோடுவதை எந்த தாயும் விரும்பமாட்டார். ஆனால் இங்கு ஒரு பெண்ணுக்கு அப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் குழப்பத்தில் நிபுணரை தொடர்பு கொண்ட ஒரு பெண்ணின் பகிர்வை இங்கு காணலாம்.
மருமகள் குளிக்கப் போனபோது பிறந்து சில வாரங்களான பச்சிளங்குழந்தைக்கு மாமியார் தாய்ப்பாலூட்டியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த மருமகள் சத்தமிட, அழும் குழந்தையை சமாதானம் செய்யவே பாலூட்டியதாக மாமியார் கூறியுள்ளார். இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், ஒரு தாயாக அந்தப் பெண்ணால் அதை சற்றும் அனுமதிக்கமுடியவில்லை. அன்றிரவே கணவரிடம் ஆதங்கமாக இதை முறையிட, அவரோ இதை கண்டுகொள்ளாமல் விடச் சொல்லியிருக்கிறார்.
மாமியார் தன் பேரக்குழந்தைக்கு பாலூட்டியதும் பாசம்தான், தாய் தன் குழந்தைக்கு தன்னை தவிர எந்தப் பெண்ணும் பாலூட்டக் கூடாது என நினைப்பதும் பாசம்தான். ஆனால் மருமகளால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மாமியாரிடம் இதை எப்படிச் சொல்ல என குழம்பிய பெண்ணுக்கு, நிபுணர் சொன்ன விளக்கம்.. சற்று தெளிவை வழங்கியுள்ளது.
இந்த மாதிரி சம்பவங்களுக்கு எளிதான விளக்கம் ஒன்றும் இல்லை. இது மருமகளுக்கும் மாமியாருக்கும் இருக்கும் இணக்கமான உறவை பொறுத்தது. சில தம்பதிகள் விஷயத்தில் கணவர் மாமியார், மருமகள் விஷயங்களில் தலையிடமாட்டார்கள். சிலருக்கு மாமியாரிமே இது போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச வாய்ப்பிருக்கும். சிலருக்கு அது கடினம். உங்களுடைய மாமியாரிடம் உங்களது மன வருத்தத்தைப் பகிர்வதை குறித்து சிந்தியுங்கள்.
ஆனால் இதுபற்றி பேசும்போது மாமியாரிடம் மரியாதையுடன் பேசுவது அவசியம். அவருக்கு கெட்ட நோக்கங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிருங்கள். அதைக் குற்றச்சாட்டாக சொல்லவேண்டாம். நேர்மறையாக பேச முயற்சி செய்யுங்கள். சில எளிய உதாரணங்கள் மூலம் விளக்கலாம். மாமியாரின் செயலுக்கும், உங்கள் எண்ணங்களுக்கும் கலாச்சார அல்லது தலைமுறை காரணங்கள் இருக்கலாம். இருவருக்கும் உகந்த ஒருமுடிவுக்கு வருவது நல்லது.
