இனி கடையில எதுக்கு! வீட்டிலேயே செய்யலாம் "முட்டை கொத்துக்கறி பரோட்டா"! எப்படி தெரியுமா?
முட்டை கொத்துக்கறி பரோட்டாவை இனிமேல் வெளியில் சென்று காத்திருந்து வாங்காமல், அசத்தலான சுவையில் கமகமக்க மணத்துடன் நாமே நம் வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நாம் வழக்கமாக பரோட்டா, முட்டை பரோட்டா, வெஜ் பரோட்டா, வீச்சு பரோட்டா போன்றவற்றை வெளியில் சென்று கடைகளில் ஆர்டர் கொடுத்து,காத்திருந்து வாங்கி சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக முட்டை கொத்துக்கறி பரோட்டாவின் வாசனைக்காகவும் ,சுவைக்காகவும் பலரும் இந்த உணவுக்கு அடிமை என்றும் கூறலாம்.
அந்த வகையில் முட்டை கொத்துக்கறி பரோட்டாவை இனிமேல் வெளியில் சென்று காத்திருந்து வாங்காமல், அசத்தலான சுவையில் கமகமக்க மணத்துடன் நாமே நம் வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/2 கிலோ
முட்டை - 2
கெட்டி தயிர்- 4 ஸ்பூன்
பட்டர் - 3 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துக்கறி செய்ய தேவையான பொருட்கள்
மட்டன் கொத்துக் கறி -1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - கையளவு
நல்லெண்ணெய் -தேவையான அளவு
Egg: முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் இவை தான்!
கொத்துக்கறி செய்முறை:
கறியை நன்கு சுத்தம் செய்து, அலசி விட்டு அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொண்ட,அதனை ஒரு குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி ,அடுப்பில் வைத்து 5 விசில் வரும் வரை வேக வைத்துக் கொண்டு, அடுப்பில் இருந்து இறக்கி விட்டு , அப்படியே தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் , மிக பொடியாக வெட்டிய பூண்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள கறியை ஸ்டாக்குடன் சேர்த்து ஊற்றி அதில் மிளகாய்த் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.கலைவையானது கொதித்து கெட்டியாக வரும் போது அடுப்பினை ஆஃப் செய்து விட்டு மல்லித் தழையை தூவி தனியாக வைத்து விட வேண்டும்.
பரோட்டா செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் மைதா மாவு, பட்டர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு நன்குமிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் கெட்டி தயிர் ஊற்றி, நன்றாக பிசைந்துக் கொண்டு கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் மாவினை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து ,மாவினை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். சப்பாத்திக் கல்லில் ஒவ்வொரு உருண்டையையும் வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, கல் சூடான பின் , தேய்த்து வைத்துள்ள மைதா சப்பாத்தியினை போட்டு ,சுற்றி சிறிது எண்ணெய் விட்டு ,சுட்டு எடுத்து , தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். .
முட்டை கொத்துக்கறி பரோட்டா செய்முறை:
முதலில் ஒரு சின்ன பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி நன்றாக பீட் செய்து கொண்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பரோட்டாக்களை சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு , அதில் பீட் செய்து வைத்துள்ள முட்டை சேர்த்து நன்றாக 3 நிமிடங்கள் வரை கிளறி விட வேண்டும்.
பின் அதில் செய்து வைத்துள்ள கொத்துக்கறி மசாலாவையம் சேர்த்து மீண்டும் 4 நிமிடங்கள் வரை கிளறி விட்டு இறக்கினால் சூப்பரான சுவையில் முட்டை வாசனையில் கமகமக்கும் முட்டை கொத்துக்கறி பரோட்டா ரெடி! தட்டில் வைத்தால் போதும், அடுத்த நிமிடமே அனைத்தும் மிச்சமில்லாமல் காணாமல் போகும்.