ஆரோக்கிய உணவு வகைகளில் கொங்கு நாட்டை அடிச்சுக்கவே முடியாது. அப்படி ஒரு ஆரோக்கிய உணவ தான் ஈரோடு பொரிச்ச கூட்டு. பெயர் மட்டுமல்ல இதன் சுவையும் வித்தியாசமாக தான் இருக்கும். பருப்பு, காய்கறி பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதை பாரம்பரிய சுவை மாறாமல் எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

பொரிச்ச கூட்டு என்பது ஈரோடு மற்றும் கொங்கு நாட்டில் பிரபலமான பாரம்பரிய உணவு. இது ஒரே நேரத்தில் காய்கறி, பருப்பு, தேங்காய் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். சாதத்திற்கும், சப்பாத்திக்கும் மிகவும் ஏற்ற உணவு இது. 

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 5-6 துண்டுகள்
கேரட் - 1/2 கப் (வெட்டியது)
சுரைக்காய் (அல்லது) பாகற்காய் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துவரம்பருப்பு - 1/2 கப்
தக்காளி -1 (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (நீளமாக வெட்டியது)
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

பொரியல் மசாலா :

தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2-3
தேங்காய் துருவல் - 1/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க தேவையானவை:

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறதளவு
காய்ந்த மிளகாய் - 1-2
சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா?இந்த வழிகளை டிரை பண்ணி பாருங்க

செய்முறை: 

- துவரம்பருப்பை நன்றாக கழுவி, குக்கரில் மஞ்சள்தூள், பச்சை மிளகாய், தக்காளி, மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெந்ததும் நன்றாக மசித்துக்கொள்ளவும்.
- நேரம் குறைக்க, காய்கறிகளை தனியாக குக்கரில் வேக வைக்கலாம். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, சாதாரண தண்ணீர் சேர்த்து முருங்கைக்காய், கேரட், சுரைக்காய் போட்டு வேக விடவும்.
 - பொரித்து அரைக்கும் மசாலா தயார் செய்வதற்கு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தனியா விதை, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்து ஆறிய பிறகு, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- பொரிச்ச கூட்டு செய்வதற்கு குக்கரில் வேகவைத்த பருப்பு மற்றும் காய்கறிகளை ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். அரைத்த பொரிச்ச மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
- தாளிப்பதற்கு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சுக்கு பொடி சேர்த்து தாளிக்கவும். இதை பொரிச்ச கூட்டில் சேர்த்து நன்றாக கிளறவும்.

வெள்ளை சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து பரிமாறலாம். சப்பாத்தி, தோசை , இடியாப்பம் ஆகியவற்றுடன் இதை தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
பகல் உணவிற்கு சிறந்த உணவு . இது புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவு.

கொங்கு நாட்டின் அசல் சுவை கிடைப்பதற்கு நல்லெண்ணெயில் மட்டும் இதை செய்வது சிறப்பு. மசாலா கொரகொரப்பாக இருக்க மிளகு, சீரகம் அளவு சிறிது அதிகப்படுத்தலாம். கடலை பருப்பும் சேர்க்கலாம். சில இடங்களில் துவரம் பருப்பிற்கு பதிலாக கடலை பருப்பு சேர்த்தும் செய்வார்கள். தேங்காய் வறுத்து சேர்த்தால் இதன் சுவை மேலும் அதிகரிக்கும். 

இது கொங்கு நாட்டின் பாரம்பரிய உணவு. பழைய காலத்தில் அம்மா, பாட்டிகள் வெங்கல பாத்திரத்தில் செய்து, பரிமாறிய பாரம்பரிய உணவுகளில் இது முக்கியமான ஒன்று. இதை செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.