சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற சத்தான லட்டு, அதன் செய்முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பிறரை போல எல்லாவிதமான உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிட முடியாது. அப்படி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
அதுபோல சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி பசி ஏற்படும் என்பதால் அவர்கள் கடைகளில் விற்பனையாகும் ஸ்னாக்ஸ் வகைகளை அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் அதற்கு பதிலாக, ஆரோக்கியமான மற்றும் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்படாத வகையில் வீட்டில் எளிதாக செய்யக்கூடிய சத்தான ஒரு லட்டு இருக்கிறது. அதுதான் உலர் பழ லட்டு அல்லது ட்ரை ப்ரூட் லட்டு (Dry Fruits Laddu). உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படும் இந்த சுவையான மற்றும் சத்தான லட்டு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அத்திப்பழம் , பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) ஏலக்காய் தூள் மற்றும் நெய்.
செய்முறை:
முதலில் பேரிச்சம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றை சில மணி நேரம் சூடான நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றையும் லேசாக நெய்யில் வறுத்து சற்று உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஊற வைத்த அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் வறுத்த கொட்டைகள் மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த இந்த கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக லட்டி வடிவில் உருட்டவும். தேவைப்பட்டால் சிறிது நெய் தடவி கூட உருட்டலாம். அவ்வளவுதான் சத்தான ட்ரை ஃப்ரூட் லட்டு ரெடி!!
தயாரித்து வைத்த இந்த லட்டுக்களை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு சேமித்து வைத்தால் கெட்டுப் போகாது. நீண்ட நாள் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு நன்மைகள் :
- உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு உடனடி ஆற்றல் மற்றும் வலுவை வழங்கும்.
- பேரிச்சம் பழம் போன்ற சில உலர் பழங்கள் சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு சுவையை வழங்குவதால் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.
குறிப்பு :
- சர்க்கரை நோயாளிகள் இந்த லட்டை அதிகமாக சாப்பிடக்கூடாது. மிதமாக தான் சாப்பிட வேண்டும்.
- உலர் பழங்களில் இருக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் குளுக்கோஸாக உடைந்து இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.
- இந்த லட்டில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கக்கூடாது.
- இந்த லட்டு தயாரிப்பில் சர்க்கரை இல்லாத அல்லது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உலர் பழங்களை சேர்க்கவும்.
- இந்த லட்டை சாப்பிடும் முன் ஒரு முறை மருத்துவரை அணுகுவது நல்லது.
பிற ஆரோக்கிய நன்மைகள் :
1. உலர் பழங்கள் இயற்கையான சர்க்கரையை அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும்.
2. இந்த லட்டு உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.
3. உலர் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
4. உலர் பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக மேம்படுத்த உதவும்.
5. உலர் பழங்களில் இருக்கும் சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவும்.
6. ட்ரை ஃப்ரூட் லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான இனிப்பு ஆகும்.
