இதெல்லாம் தேவையா? ‘சிறகடிக்க ஆசை’ சீரியலால் கடுப்பான ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் புரோமோவை பார்த்து ரசிகர்கள் சீரியலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Vijay Tv Siragadikka Aasai Serial
விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த், முத்து என்ற கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக கோமதி பிரியா, மீனா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் பூக்கடை நடத்தி வரும் ஒரு ஏழைக் குடும்பத்தின் பெண்ணான மீனாவுக்கும், குடிப்பழக்கத்தால் போராடும் ஒரு ஒழுங்கற்ற டாக்ஸி டிரைவருக்கும் இடையிலான எதிர்பாராத திருமணத்தை மையமாகக் கொண்டது. வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்ட அவர்கள் பின்னர் மெதுவாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர்.
சலிப்பை ஏற்படுத்தும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்
திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மீனா அவரது மாமியார் விஜயாவால் கொடுமைப்படுத்தப்படுகிறார். மற்ற இரண்டு மருமகள்களும் வசதியான வீட்டு மருமகள்கள் என்று சொல்லி, விஜயா மீனாவை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறார். தற்போது மூத்த மருமகள் ரோகிணி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என பொய் சொல்லி மனோஜை திருமணம் செய்து கொண்டது விஜயாவுக்கு தெரியவந்துள்ளது. கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது வேறு வேறு தேவையே இல்லாத எபிசோடுகளை போட்டு ரசிகர்களை இயக்குனர் எரிச்சல் அடைய வைத்துள்ளார். இந்த வாரம் வெளியான புரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், “இதெல்லாம் தேவையில்லாத ஆணி” என்று கமெண்ட்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
கதையை திசை திருப்பிய இயக்குனர்
விஜயாவிற்கு முத்துவை பிடிக்காமல் போனதற்கு பின்னால் ஒரு ஃபிளாஷ்பேக் கதை இருக்கிறது. அம்மா மற்றும் மகனுக்கு இடையே நடந்த அந்த கசப்பான சம்பவம், ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயம், மனோஜின் திருட்டுத்தனம் ஆகியவை தான் இந்த சீரியலில் முக்கியமான கதை. ஆரம்பத்தில் இதை மையமாக வைத்தே இந்த சீரியல் நகரத் தொடங்கியது. இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர். டிஆர்பி ரேட்டிங்கிலும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வந்தது. இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர். நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் தற்போது தேவையில்லாத கதையை வலிய திணித்து வருகின்றனர்.
‘சிறகடிக்க ஆசை’ புரோமாவால் அதிர்ச்சி
மனோஜ் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சாமியாரை வைத்து விஜயாவிடம் எமன் உங்கள் உயிரை எடுக்கப் போகிறான் என ஏமாற்றி வைக்கிறார். அந்த பயத்தில் இருக்கும் விஜயாவை முத்து எமன் போன்று மாறுவேடத்தில் வந்து மிரட்டுகிறார். முத்து தான் எமன் வேடத்தில் வந்திருக்கிறார் என தெரியாமல் விஜயா அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் அது முத்து தான் என தெரியவில்லை. அப்போது அங்கு வரும் அண்ணாமலை முத்துவை கண்டுபிடிக்க, அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலின் கதை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர்.
தொடர்ந்து சரியும் ‘சிறகடிக்க ஆசை’ டிஆர்பி ரேட்டிங்
சீரியல் ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங்கில் பலத்த அடி வாங்கி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் முந்தி சென்று வரும் நிலையில், விஜய் டிவியின் சீரியல்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றன. ரசிகர்கள் ஒரு சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதற்காக சீரியல் இயக்குனர்கள் நாட்களை கடத்தும் பொருட்டு இது போன்ற தேவையில்லாத பல எபிசோடுகளை வலிய திணிக்கின்றனர். தேவையில்லாத காட்சிகள், புதுப்புது கதாபாத்திரங்களை கொண்டு வந்து சீரியல்களை பல ஆண்டுகள் இழுத்தடிக்க நினைக்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கே எதிர்வினையாக முடிகிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களை இது போன்ற தேவையில்லாத கதைகளை திணித்து இயக்குனர்கள் தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கின்றனர்.
கதைய மாத்துங்கப்பா.. ரசிகர்கள் கதறல்
அந்த வரிசையில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இயக்குனரும் தற்போது இணைந்துள்ளார். கதையை அவர் கொண்டு செல்லும் விதம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வார புரோமோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “எபிசோடு தான் போர் அடிக்கிறது என்று பார்த்தால், புரோமோ கூட இப்படி போர் அடிக்கிறதே” என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.