- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP-ஐ வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?
சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP-ஐ வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?
சின்னத்திரை சீரியல்களின் வெற்றியை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Highest TRP Rating Tamil Serials
திரைப்படங்களின் வெற்றி அதன் வசூலை வைத்து மதிப்பிடப்படும். அதேபோல் சின்னத்திரை சீரியல்களின் வெற்றி அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் சின்னத்திரை வரலாற்றில் இதுவரை அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில் முதலிடம் பிடித்துள்ள சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 50 புள்ளிகளுக்கும் மேல் உள்ளது.
டாப் 10-ல் சரவணன் மீனாட்சி
இந்த பட்டியலில் 10வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. சுமார் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், அதிகபட்சமாக 8.7 டிஆர்பியை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் கிளாசிக் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி உள்ளது. அந்த சீரியல் அதிகபட்சமாக 10 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று 9-வது இடத்தில் உள்ளது. மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடிப்பில் வெளிவந்த இந்த சீரியலின் முதல் சீசன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், அடுத்த சீசனில் கவின், அதற்கு அடுத்த சீசனில் ரியோ ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆதிக்கம் செலுத்திய சன் டிவி சீரியல்கள்
இந்த பட்டியலில் 8-ம் இடத்தில் சன் டிவியில் தற்போது வெற்றிநடைபோட்டு வரும் கயல் சீரியல் உள்ளது. அந்த சீரியல் அதிகபட்சமாக 11.07 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன்பின்னர் 7-வது இடத்தில் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான சிங்கப்பெண்ணே உள்ளது. இந்த சீரியல் அதிகபட்சமாக 11.2 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 6-வது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியல் அதிகபட்சமாக 11.5 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருக்கிறது. இதையடுத்து எஞ்சியுள்ள 5 இடங்களையும் சன் டிவியின் பழைய சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன.
முதலிடம் யாருக்கு?
அதன்படி ஐந்தாவது மற்றும் நான்காவது இடத்தை ராதிகா நடித்த சித்தி சீரியலும், வாணி போஜன் நடிப்பில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலும் பிடித்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் திருமுருகன் இயக்கி நடித்த நாதஸ்வரம் சீரியல் 22 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருக்கிறது. இதன்பின்னர் தேவையானி நடித்து சன் டிவியில் சக்கைப்போடு போட்ட கோலங்கள் சீரியல், 25.68 டிஆர்பி ரேட்டிங் உடன், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த முதலிடத்தை மெட்டி ஒலி சீரியல் தான் பிடித்துள்ளது. இந்த சீரியல், 50.3 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்த ஒரு சீரியலும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

