- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முதல் வாரமே அதளபாதாளத்துக்கு சென்ற பிக் பாஸ் சீசன் 9 டிஆர்பி ரேட்டிங்... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?
முதல் வாரமே அதளபாதாளத்துக்கு சென்ற பிக் பாஸ் சீசன் 9 டிஆர்பி ரேட்டிங்... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அந்நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் முதல் வாரமே மிகவும் கம்மியாக வந்துள்ளது.

Bigg Boss Tamil Season 9 Launch Week TRP
விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 5-ந் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இந்த சீசனிலும் தொகுப்பாளராக உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் வெளியிடப்பட்ட புரோமோக்களில் ஒன்னுமே புரியலையே என்கிற பாடலோடு தான் வெளியிட்டிருந்தார். தற்போது அந்நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் அதையே புலம்பி வருகிறார்கள்.
சொதப்பிய பிக் பாஸ்
எதற்காக பிக் பாஸ் டீம் ஆட்கள் தேர்வில் இப்படி கோட்டைவிட்டுள்ளார்கள் என்பது புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகிறார். இந்த முறை மனதைக் கவரும் வகையில் எந்த போட்டியாளரும் அமையாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. வழக்கமாக ஒன்றிரண்டு வாரங்களிலேயே யார் இறுதி வரை செல்வார் என்பதை கணிக்க முடியும். ஆனால் இந்த சீசனில் தான் யாருமே செல்லக்கூடாது என எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஆட்கள் தேர்வு மிகவும் சுமாராகவே அமைந்திருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இரண்டு பேர் வெளியேறி உள்ளனர்.
பிக் பாஸ் போட்டியாளர்கள்
நந்தினி உடல்நலத்தை காரணம் காட்டி நிகழ்ச்சியில் இருந்து வாக் அவுட் பண்ணினார். கடந்த வாரம் நடந்த எலிமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, துஷார், அரோரா, எஃப்.ஜே, ஆதிரை, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், பிரவீன் ராஜ், சபரிநாதன், வியானா, மீனவ பெண் சுபி, கனி, கம்ருதீன், கெமி ஆகிய 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் இடையே தான் தற்போது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் முதல் கேப்டனான துஷார் மோசமாக கேப்டன்ஸி செய்ததால் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
பிக் பாஸ் டிஆர்பி
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதன்படி, பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் படுமோசமான டிஆர்பி ரேட்டிங்கை இந்த சீசன் பெற்றிருக்கிறது. முதல் வாரம் இந்நிகழ்ச்சி 4.14 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே கிடைத்திருக்கிறது. கடந்த சீசனில் கூட முதல் வாரம் 6 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருந்தது. ஆனால் இந்தமுறை முதல் வாரமே டிஆர்பி பயங்கரமாக அடிவாங்கி உள்ளது. இனி வரும் வாரங்களிலாவது டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.